(Photo: Daniil Medvedev/Facebook)
பெரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் ரஷ்யாவின் டேனில் மெட்வெடெவ் முதல் தடவையாக சாம்பியன் பட்டத்தை சுவீகரித்தார்.
இதற்கான இறுதிப் போட்டியில் அவர் ஜேர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வரெவ்வை வெற்றிகொண்டார்.
பெரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் சாம்பியன் கிண்ணத்தொடர் பிரான்ஸில் நடைபெற்றது. இதில் நட்சத்திர வீரரான ஸ்பெய்னின் ரஃபேல் நடால் சனிக்கிழமை நடைபெற்ற அரை இறுதியில் தோல்வியடைந்தார்.
உலகின் ஐந்தாம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனில் மெட்வெடெவ் மற்றும் ஜேர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வரெவ் ஆகியோர் இறுதிப் போட்டியில் விளையாடினர்.
போட்டியில் முதல் செட்டை 7-5 எனும் கணக்கில் ஸ்வரெவ் கைப்பற்றி சவால் விடுத்தார்.
ஆனாலும், அதனால் துவண்டு போகாத மெட்வெடெவ் அடுத்த இரண்டு செட்களில் திறமையை வெளிப்படுத்தி 6-4, 6-1 என முன்னிலைப் பெற்று வெற்றியை தனதாக்கினார்.
இந்தப் போட்டி 2 மணித்தியாலங்களுக்கு மேல் நீடித்தது. இது டென்னிஸ் வரலாற்றில் மெட்வெடெவ் பெற்ற மூன்றாவது மாஸ்டர்ஸ் சாம்பியன் பட்டமாகும்.
ஏற்கனவே அவர் சின்சினாட்டி, ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் சாம்பியன் பட்டங்களை கடந்த ஆண்டு வெற்றிகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.