May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமெரிக்க ஓபன்: இறுதி ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ்- நயோமி ஒசாகா மீண்டும் மோதும் வாய்ப்பு?

நியூ யோர்க்கில் நடைபெற்றுவரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் அரையிறுதியை எட்டியுள்ளது. மகளிர் பிரிவில் 6-முறை சம்பியனாகியுள்ள (US Open) செரீனா வில்லியம்ஸ் – முன்னாள் ‘உலக நம்பர் வன்’ விக்டோரியா அசெரென்காவை அரையிறுதியில் சந்திக்கிறார். அடுத்த அரையிறுதியில் ஜப்பானின் நயோமி ஒசாகா – அமெரிக்க வீராங்கனை ஜெனிஃபர் பிராடியுடன் மோதுகின்றார்.

மீண்டும் 2018

இந்த ஆட்டங்களில் வில்லியம்ஸும் ஒசாகாவும் வென்றால்- 2018-ம் ஆண்டின் இறுதி ஆட்டத்தைப் போல்- மீண்டுமொரு ஆட்டத்தை பார்க்கும் விறுவிறுப்பு வாய்ப்பு டென்னிஸ் ரசிகர்களுக்கு கிடைக்கும். அந்த ஆட்டத்தில் 6-2, 6-4 என்ற கணக்கில் செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி நயோமி ஒசாகா வெற்றி வாகை சூடியிருந்தார்.அந்த ஆட்டத்தில், தொடக்கத்திலேயே நடுவரோடு ஏற்பட்ட வாக்குவாதத்தால் செரீனா வில்லியம்ஸின் கவனம் சிதறியிருந்தது. ஆனால், முழுக்கவனத்தையும் போட்டியில் குவித்து ‘கிரான்ட் ஸ்லாம்’ வென்ற முதல் ஜப்பானியர் என்ற பெருமையை பெற்றார் ஒசாகா. கடந்த ஆண்டு ஒஸ்ட்ரேலிய ஓபனையும் வென்ற ஒசாகா, இம்முறை அமெரிக்க ஓபனிலும் ஆரம்பம் முதலே அபாரமாக ஆடி வந்துள்ளார்.

24-வது கிரான்ட் ஸ்லாம்?

செரீனாவும் ஒவ்வொரு ஆட்டத்திலும் படிப்படியாக முன்னேற்றம் காட்டி வந்துள்ளார்.மகளிர் ஒற்றையர் பிரிவில் 24 ‘கிரான்ட் ஸ்லாம்’ பட்டங்களை வென்றுள்ள மார்கரெட் கோர்ட்-இன் சாதனையை இம்முறை எப்படியாவது சமப்படுத்திவிட வேண்டும் என்பதில் செரீனா குறியாய் இருக்கிறார்.செரீனாவையும் நயோமியையும் அரையிறுதில் எதிர்கொள்ளவுள்ள வீராங்கனைகளும் சளைத்தவர்கள் அல்ல.தனது முதலாவது ‘கிரான்ட் ஸ்லாம்’ அரையிறுதிக்குள் நுழைந்துள்ள ஜெனிஃபர் பிராடி, ஒசாகா நயோமிக்கு சவாலாக இருப்பார் என்றே நம்பப்படுகின்றது.

“சூப்பர் மம்ஸ்”- (Super Mums)

அதேபோல், பெலாரஸ்- இன் விக்டோரியா அசெரென்காவுக்கு செரீனாவும் புதியவர் அல்ல. 22 ஆட்டங்களில் 4 ஆட்டங்களில் செரீனாவை வீழ்த்தியிருக்கிறார். 2012 மற்றும் 2013-இல் அடுத்தடுத்து ஒஸ்ட்ரேலிய ஓபனை வென்றவர். செரீனா போல் அவரும் ஒரு தாய். (இம்முறை மூன்று தாய்மார் அமெரிக்க ஓபன் ‘இறுதி 16 -இல்’ இடம்பிடித்தனர். காலிறுதியில் இன்றொரு தாயான டிஸ்வேடனா பிரொன்கோவாவை செரீனா வென்றிருந்தார்).