July 2, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டாக்கா சர்வதேச மரதன்: மலையக வீரர்கள் இருவருக்கு வாய்ப்பு

பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் எதிர்வரும் ஜனவரி மாதம் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள ‘பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மான்’ அழைப்பு சர்வதேச மரதன் ஓட்டப் போட்டிக்கு இலங்கையைச் சேர்ந்த இரண்டு ஆண் வீரர்களும், இரண்டு பெண் வீராங்கனைகளும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மே மாதம் கதிர்காமத்தில் நடைபெற்ற 46வது தேசிய விளையாட்டு விழா மரதன் ஓட்டத்தில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்ற வீரர்களை ‘பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மான்’ அழைப்பு சர்வதேச மரதன் ஓட்டப் போட்டியில் பங்கேற்கச் செய்ய இலங்கை மெய்வல்லுனர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, டாக்கா மரதன் ஓட்டப் போட்டிக்கு ஆண்கள் பிரிவில் பரிந்துரைக்கப்பட்ட  நுவரெலியாவைச் சேர்ந்த முத்துசாமி சிவராஜன், கதிர்காமத்தில் நடைபெற்ற மரதன் போட்டியை 2 மணித்தியாலம் 29.29 செக்கன்களில் நிறைவுசெய்து தங்கப் பதக்கம் வென்றார்.

ஆரம்பத்தில் நீண்ட தூர ஓட்டப் போட்டிகளில் மாத்திரம் பங்கேற்று வந்த அவர், முதல் முறையாக மரதன் ஓட்டத்தில் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.

31 வயதான சிவராஜன், அண்மையில் நிறைவுக்கு வந்த தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில ஆண்களுக்கான 10 ஆயிரம் மீட்டரில் 4ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

46வது தேசிய விளையாட்டு விழா பெண்களுக்கான மரதன் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மலையக வீராங்கனையான வேலு கிரிஷாந்தினியும் இலங்கைக்குழாத்தில் இடம்பெற்றுள்ளார்.

33 வயதான வேலு கிரிஷாந்தினி, அனுபவம் வாய்ந்த மரதன் ஓட்ட வீராங்கனை ஆவார், இறுதியாக அவர் 2019 இல் சீனா – மெக்காவு நாட்டில் நடைபெற்ற மரதன் போட்டியில் பங்குபற்றி 17 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

எனினும், 2017இல் துபாய் மற்றும் சீனாவின் கும்மின் நகரில் நடைபெற்ற இரண்டு சர்வதேச மரதன் ஓட்டப் போட்டிகளில் பங்குபற்றிய அவர், முறையே 15 மற்றும் 4ஆவது இடங்களைப் பெற்றிருந்தார்.

இதேவேளை அண்மையில் நிறைவுக்கு வந்த தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பெண்களுக்கான 10 ஆயிரம் மீட்டரில் வெண்கலப் பதக்கம் வென்ற வேலு, கிருஷாந்தினி, 5 ஆயிரம் மீட்டரில் 4ஆவது இடத்தைப் பிடித்தார்.

இதனிடையே, டாக்கா மரதன் போட்டியில் சிவராஜன் மற்றும் வேலு கிரிஷாந்தினியுடன் திஸ்ஸ குணசேகர, வத்ஸலா ஹேரத் ஆகிய இரண்டு வீரர்களும் பங்கேற்கவுள்ளனர்.