July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஒமிக்ரோன் பரவலுக்கு மத்தியில் தென்னாபிரிக்கா செல்லும் இந்திய அணி

இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் இடையேயான டெஸ்ட் தொடர் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகும் என பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது.

இந்திய அணி தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 4 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட திட்டமிட்டிருந்தது.

இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பமாக இருந்ததுடன், இந்தத் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி எதிர்வரும் 8 ஆம் திகதி தென்னாபிரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தென்னாபிரிக்காவில் தற்போது ஒமிக்ரோன் எனப்படுகின்ற வைரஸ் வேகமாக பரவி வருவதால் இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற இருந்த கிரிக்கெட் தொடரை ஒத்திவைப்பதாக இந்திய கிரிக்கெட் சபை அறிவித்தது.

இதனிடையே, எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பமாக இருந்த டெஸ்ட் தொடரை எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் நடத்துவதற்கு பி.சி.சி.ஐ  இன் 90 ஆவது வருடாந்த பொதுக் கூட்டத்தில் வைத்து அறிவிக்கப்பட்டது.

அதேபோன்று, ஒருநாள் தொடரும் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிக்கப்பட்டாலும், டி-20 தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது ஒருபுறம் இருக்க, தென்னாபிரிக்காவுக்கு இந்திய அணியின் முன்னணி வீரர்கள் செல்வார்களா என்பதில் தற்போது பிரச்சினை நிலவி வருகிறது. திட்டமிட்டபடி சுற்றுப்பயணம் நடக்கும் என பி.சி.சி.ஐ கூறினாலும், அங்கு செல்ல இந்திய அணியின் சிரேஷ்ட வீரர்கள் மறுப்பு தெரிவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.