
தென்னாபிரிக்க உள்ளிட்ட ஆபிரிக்க நாடுகளில் வேகமாகப் பரவி வரும் ஒமிக்ரோன் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக எல்.பி.எல் தொடரிலிருந்து இரண்டு தென்னாபிரிக்க கிரிக்கெட் வீரர்கள் விலகுவதாக அறிவித்துள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எல்.பி.எல் தொடரின் இரண்டாவது சீசன் நாளை கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
கிறிஸ் கெய்ல், மொஹமட் ஹபீஸ் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் பங்குபற்றவுள்ள இம்முறை எல்.பி.எல் தொடரில் கோல் கிளேடியேட்டர்ஸ் அணிக்காக தென்னாபிரிக்காவின் தப்ரிஸ் ஷம்ஸியும், கண்டி வொரியர்ஸ் அணிக்காக மற்றுமொரு தென்னாபிரிக்க வீரரான கெமரூன் டெல்போர்ட்டும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், புதிதாக கண்டறியப்பட்ட கொவிட் மாறுபாடான ‘ஒமிக்ரோன்’ காரணமாக பல ஆபிரிக்க நாடுகளுக்கு பயணத்தடையை விதிக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துள்ளதால், எல்.பி.எல் தொடரில் விளையாடவிருந்த குறித்த இரண்டு தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர்களும் பங்கேற்க மாட்டார்கள் என அறிவிக்கப்ப்ட்டுள்ளது.
எவ்வாறாயினும், அபுதாபியில் நடைபெறும் டி10 லீக்கில் விளையாடி வருகின்ற பாப் டு பிளெசிஸ் மற்றும் இம்ரான் தாஹிர் உள்ளிட்ட சில தென்னாபிரிக்க கிரிக்கெட் வீரர்கள், நாளை ஆரம்பமாகவுள்ள எல்.பி.எல் தொடரில் இணைந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்.பி.எல் தொடர் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில், முதல் போட்டியில் ஜப்னா கிங்ஸ் மற்றும் கோல் கிளேடியேட்டர்ஸ் அணிகள் இரவு 07.30 மணிக்கு பலப்பரீட்சை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.