அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐ.பி.எல் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி தக்கவைக்கும் நான்கு வீரர்கள் குறித்த விபரம் வெளியாகியுள்ளது.
அடுத்த ஆண்டு ஐ.பி.எல் தொடருக்கு முன் மெகா ஏலம் நடத்தப்பட உள்ளதால் ஒவ்வொரு அணியும் எந்த எந்த வீரர்களை தக்கவைத்துக் கொள்வது என்பதில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறது.
மெகா ஏலம் அடுத்த மாதம் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுவதால் ஒவ்வொரு அணியின் நிர்வாகமும் தங்களுக்கு தேவையான வீரர்களை தேர்ந்தெடுப்பதில் முனைப்பு காட்டி வருகின்றன.
இந்த நிலையில், ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று முடிந்த 14 ஆவது ஐ.பி.எல் சீசனில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 4 ஆவது முறையாக சம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. இதனை அடுத்து அடுத்த ஆண்டு டோனி விளையாடுவாரா? என்பதுதான் ரசிகர்கள் மத்தியில் பெரிய கேள்வியாக இருந்தது.
இந்த நிலையில் டோனி நிச்சயம் அடுத்த ஆண்டு முதல் நபராக அணியில் தக்கவைக்கப்படுவது மட்டுமன்றி, தலைவராகவும் நீடிப்பார் என ஏற்கனவே சென்னை அணி நிர்வாகம் அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து அடுத்த மாதம் நடைபெறவுள்ள மெகா ஏலத்திற்கு முன்னர் சென்னை அணியால் தக்கவைக்கப்படும் நான்கு வீரர்களின் விபரம் தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி, டோனி தவிர நடைபெற்று முடிந்த ஐ.பி.எல் தொடரில் அதிக ஓட்டங்களை எடுத்த இளம் ஆரம்ப வீரர் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சகலதுறை வீரர் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இந்திய வீரர்களிலும், வெளிநாட்டு வீரர்களில் பாப் டு பிளெசிஸ் ஆகியோரும் தக்கவைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஆரம்பமாகும் என்று கூறப்படும் அடுத்த ஐ.பி.எல் தொடரின் 15 ஆவது சீசனின் முதல் போட்டியே சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.