July 2, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”என்னுடைய கடைசி டி-20 போட்டி சென்னையில்தான் நடக்கும்”: டோனி

Photo: Twitter/CSK

என்னுடைய கடைசி டி-20 போட்டி சென்னையில்தான் நடைபெறும் என்று சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வீரர்களுக்கான பாராட்டு விழாவில் மகேந்திர சிங் டோனி தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல் தொடரின் 14 ஆவது சீசனில் டோனி தலைமையிலான சென்னை சுப்பர் கிங்ஸ் அணி சம்பியன் பட்டம் வென்றது.

சென்னை அணியின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

அங்கு டோனி உரையாற்றுகையில், ”2008ஆம் ஆண்டு சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் இணைந்ததிலிருந்து சென்னை மீதான உறவு ஆரம்பமாகியது. சென்னையில் தான் நான் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானேன். அது மறக்க முடியாத நினைவு.

நான் சென்னை அணிக்கு தேர்வு செய்யப்படுவேன் என்று தெரியாது. நான் புறப்பட்ட இடத்திற்கு முற்றிலும் மாறுபட்ட கலாசாரத்தைப் புரிந்துகொள்வதற்கான வாய்ப்பை இது வழங்கியது.

நான் தொடர் பயணத்திலேயே இருப்பவர்களைப் போன்றவன். என்னுடைய பெற்றோர்கள் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். பின்னர் அது உத்தரகண்டாக மாறியது. நான் ராஞ்சியில் பிறந்தேன். அது பிகார். பின்னர் ஜார்க்கண்டாக மாறியது. 18 வயதில் ரயில்வே துறையில் மேற்கு வங்கத்தில் பணிபுரிந்தேன். பின்னர் சென்னை வந்தேன்.

சென்னையும், தமிழ்நாடும் எனக்கு நிறைய கற்றுக்கொடுத்துள்ளது. சேப்பாக்கத்தில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் ரசிகர்கள் கிரிக்கெட்டை ஆதரித்தார்கள். எதிரணி நன்றாக விளையாடக் கூடாது என்ற மனநிலை சேப்பாக்கத்துக்குப் பொருந்தாது. நாங்கள் சிறப்பாக செயல்படாதபோது, நாங்கள் களத்தில் இல்லாதபோது ரசிகர்கள் எங்களை ஆதரித்தார்கள்.

எனவே, எனது கடைசி டி-20 போட்டி சென்னையில் தான் நடைபெறும் என நம்புகிறேன்” என்று டோனி தெரிவித்தார்.

இதன்மூலம் அடுத்த ஆண்டு ஐ.பி.எல் தொடரிலும் சென்னை அணியின் தலைவராக டோனி விளையாடுவார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

This slideshow requires JavaScript.