November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

24 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவுஸ்திரேலியா!

Photo: Twitter/ Australia Men’s Cricket Team

அவுஸ்திரேலிய அணி அடுத்த ஆண்டு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் ஒரு டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும் என அந்நாட்டு கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இதன்படி, 24 ஆண்டுகளுக்குப் பின்னர் அவுஸ்திரேலிய அணி இவ்வாறு பாகிஸ்தானுக்கான முழுமையான கிரிக்கெட் சுற்றுப் பயணத்தை மேற்கொள்கிறது.

இப்போட்டிகள் எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பாகிஸ்தானின் கராச்சி, ராவல்பிண்டி மற்றும் லாகூர் ஆகிய மைதானங்களில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி டெஸ்ட் தொடர் மார்ச் 3 ஆம் திகதி ஆரம்பமாகி மார்ச் 25 ஆம் திகதி முடிவடைகிறது. மேலும் இந்த டெஸ்ட் தொடர் கராச்சி, ராவல்பிண்டி, லாகூரில் நடைபெறுகின்றன.

அதேசமயம், ஒருநாள், டி- 20 தொடர்கள் லாகூரில் நடைபெறுகின்றன. மார்ச் 29 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் ஒருநாள் தொடர், ஏப்ரல் 2 ஆம் திகதியுடனும், டி-20 போட்டி ஏப்ரல் 5 ஆம் திகதியும் நடைபெறவுள்ளது.

இறுதியாக அவுஸ்திரேலிய அணி 1998 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது.

1998 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் அவுஸ்திரேலியா வெல்ல, அடுத்து நடைபெற்ற 2 டெஸ்ட் போட்டிகளும் சமநிலையில் முடிந்தன. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், 3 போட்டிகளிலுமே அவுஸ்திரேலிய அணி அபாரமாக வென்று தொடரை தட்டிச் சென்றது. எனவே, டெஸ்ட், ஒருநாள் என இரண்டு தொடர்களையும் அவுஸ்திரேலியாவே வென்றது.

எனவே, தற்போது கிட்டத்தட்ட 24 ஆண்டுகள் கழித்து அவுஸ்திரேலிய அணி  மீண்டும் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செல்வதால் இந்தத் தொடர் குறித்து எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இதேவேளை, நடப்பு டி-20 உலகக் கிண்ணத் தொடரின் 2 ஆவது அரை இறுதியில் பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் எதிர்வரும் 11 ஆம் திகதி பலப்பரீட்சை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.