Photo: Twitter/ICC
டி-20 உலகக் கிண்ணத்தில் இந்தியாவின் அரை இறுதிக் கனவை ஆப்கானிஸ்தான் அணி நனவாக்குமா என்ற எதிர்பார்ப்பில் இந்திய அணி உள்ளது.
டி-20 உலகக் கிண்ணத்தில் குழு 2-இல் இரண்டாவது அணியாக அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேற நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், இந்தியா அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது.
நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் தலா 4 போட்டிகளில் விளையாடியுள்ளன. புள்ளிப் பட்டியலில் நியூசிலாந்து 6 புள்ளிகளுடனும், இந்தியா, ஆப்கானிஸ்தான் தலா 4 புள்ளிகளுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
சுப்பர் 12 சுற்றின் கடைசி லீக் போட்டியில் இந்திய அணி நாளைய தினம் நமீபியாவை எதிர்கொள்கிறது. இதனிடையே, இன்று மாலை நடைபெறவுள்ள போட்டியில் நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இதில் நியூசிலாந்து அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தினால், 8 புள்ளிகள் பெற்று அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறிவிடும்.
ஒருவேளை ஆப்கானிஸ்தான் அணி நியூசிலாந்தை வீழ்த்தினால், இவ்விரு அணிகளும் தலா 6 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் இருக்கும். இந்த சூழலில் நமீபியாவை வீழ்த்தினால் இந்திய அணி ஓட்ட விகித புள்ளிகள் அடிப்படையில் அரை இறுதிக்கு தகுதிபெறுவதற்கான வாய்ப்பு உண்டு.
எனவே, இன்று இரவு நடைபெறவுள்ள நியூசிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான போட்டியை அனைவரும் எதிர்பார்த்துள்ளனர்.
இதில் இந்தியாவின் ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆப்கானிஸ்தானுக்கு ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.