Photo: Sri Lanka Cricket
டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்குபற்றிய இலங்கை அணி வீரர்கள் நேற்று அதிகாலை நாடு திரும்பினர்.
இம்முறை டி-20 உலகக் கிண்ணத்தில் சுப்பர் 12 சுற்றில் குழு 1-இல் இடம்பெற்ற இலங்கை அணி, 5 போட்டிகளில் 2 போட்டிகளில் மாத்திரம் வெற்றியீட்டியது.
இதனால், அரை இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகும் வாய்ப்பை இழந்தது.
இதேவேளை, நேற்று அதிகாலை 1.45 மணியளவில் நாடு திரும்பிய இலங்கை அணித் தலைவர் தசுன் ஷானக, சரித் அசலங்க, அவிஷ்க பெர்னாண்டோ உள்ளிட்ட முக்கிய வீரர்கள், நேற்று காலை நடைபெற்ற உள்ளூர் கழங்களுக்கிடையிலான ஒருநாள் போட்டியில் பங்குபற்றுவதற்காக மைதானம் வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பில். கொழும்ப எஸ்.எஸ்.சி கழகத்தின் பயிற்சியாளர் திலின கண்டம்பி டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டிருந்தார்.
அந்தப் பதிவில், நாட்டுக்கான பணியை நிறைவு செய்து, அதிகாலை 1.45 மணிக்கு இலங்கையை அடைந்த வீரர்கள், அதிகாலை 4.30 மணிக்கு வீடு திரும்பியிருந்தனர்.
எனினும் தமிழ் யூனியன் அணியுடனான போட்டியில் எஸ்.எஸ்.சி அணி சார்பில் விளையாடுவதற்காக அன்றைய தினம் காலை 8.00 மணிக்கு மீண்டும் மைதானம் திரும்பியுள்ளனர். தசுன் ஷானக, சரித் அசலங்க, அவிஷ்க பெர்னாண்டோ ஆகியோரின் அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது என குறிப்பிட்டிருந்தார்.