அடுத்த மாதம் நடைபெறவுள்ள எல்.பி.எல் தொடரின் இரண்டாவது சீசனுக்கான வீரர்கள் ஏலத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் 9 ஆம் திகதி வரை ஒத்திவைக்க இலங்கை கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த ஆண்டு நடைபெறவுள்ள எல்.பி.எல் தொடரின் வீரர்கள் ஏலம் வெள்ளிக்கிழமை (5) இணையவழி ஊடாக நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் சபை ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்த நிலையில், எல்.பி.எல் தொடரின் வீரர்கள் ஏலம் நடைபெறும் காலப்பகுதியில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதன் காரணமாக, எல்.பி.எல் தொடரின் வீரர்கள் ஏலத்தை எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்கு (09) ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை (SLC) வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இந்த ஆண்டு எல்.பி.எல் வீரர்கள் ஏலத்தில், இலங்கையின் 300 கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் 300 பேர் என 600 வீரர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர். குறித்த இந்த வீரர்கள் ஏலமானது, இணையவழி ஊடாக (Video Conference) இடம்பெறவுள்ளதுடன், இதில் இலங்கை கிரிக்கெட் சபை அதிகாரிகள் மற்றும் லங்கா பிரீமியர் லீக் தொடரில் விளையாடும் ஐந்து அணிகளின் உரிமையாளர்கள் பங்குபற்றவுள்ளனர்.
இருபது சுற்றுக்களாக நடைபெறவுள்ள இந்த வீரர்கள் ஏலத்தில், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஐகோன் வீரர்கள் (Icon), உள்ளூர் மற்றும் வெளிநாட்டு டயமண்ட் வீரர்கள் (Diamond), உள்ளூர் மற்றும் வெளிநாட்டு கோல்ட் வீரர்கள் (Gold), உள்ளூர் மற்றும் வெளிநாட்டு கிளாசிக் (Classic) வீரர்கள் என்ற பிரிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அதேநேரம், இலங்கையில் உள்ள இளம் வீரர்களை கண்டறியும் நோக்கில், உள்நாட்டு வளர்ந்து வரும் வீரர்கள் (Local Emerging) மற்றும் சப்லிமண்டரி வீரர்கள் (Supplementary Local) என்ற பிரிவுகளும் இணைக்கப்பட்டுள்ளன. இதில் அறிவிக்கப்படும் குழாத்தில் அதிகபட்சமாக 20 வீரர்கள் இருக்கவேண்டும் என்பதுடன், 6 வெளிநாட்டு வீரர்களை உள்வாங்க முடியும்.
அதேநேரம், கடந்த ஆண்டு விளையாடிய வீரர்களிலிருந்து அணியொன்று, உள்ளூர் வீரர்கள் நால்வர் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் நால்வர் என 8 வீரர்களை தக்கவைத்துக் கொள்ள முடியும். ஏனைய வீரர்களை ஏலத்திலிருந்து இணைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த ஆண்டுக்கான எல்.பி.எல் தொடர், டிசம்பர் 5 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதிவரை நடைபெறும் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இம்முறை தொடரின் முதல் சுற்றுப் போட்டிகள் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், அடுத்த சுற்றுப் போட்டிகள் ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ளன.