July 2, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சென்னை அணியில் தக்கவைக்க வேண்டாம் என டோனி அறிவிப்பு?

அடுத்தாண்டு ஐ.பி.எல் தொடரில் தன்னை சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் தக்கவைக்க வேண்டாமென மகேந்திர சிங் டோனி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் சென்னை அணியானது பிளே-ஒப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் முதல் அணியாக தொடரில் இருந்து வெளியேறியது.

இந்த நிலையில், கடந்த மாதம் நடைபெற்று முடிந்த 14 ஆவது ஐ.பி.எல் தொடரில் ஆரம்பம் முதலே புள்ளிப் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தி வந்த சென்னை அணியானது பிளே-ஒப் சுற்றை முதல் அணியாக உறுதி செய்தது.

அதுமட்டுமன்றி கொல்கத்தா அணிக்கெதிரான இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று நான்காவது முறையாக ஐ.பி.எல் தொடரின் சம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி அசத்தியது.

இது இவ்வாறிருக்க, அடுத்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் இரண்டு அணிகள் புதிதாக இணைய உள்ளதால் வீரர்கள் அனைவரும் கலைக்கப்பட்டு மெகா ஏலம் நடத்தப்படும் என பி.சி.சி.ஐ அறிவித்திருந்தது.

மேலும் ஒவ்வொரு அணியும் நான்கு வீரர்களை தக்கவைத்துக் கொள்ளலாம் என்று முடிவு அறிவிக்கப்பட்ட நிலையில், அனைத்து அணிகளும் தற்போது தங்களது அணியில் உள்ள நான்கு வீரர்களை தக்கவைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.

அந்தவகையில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியானது ருதுராஜ் கெய்க்வாட், பாப் டு பிளெசிஸ் மற்றும் எம்.எஸ் டோனி, ரவீந்திர ஜடேஜா ஆகிய நால்வரை தக்கவைக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில், டோனியிடமிருந்து சென்னை அணி நிர்வாகத்திற்கு வாட்ஸ் அப் மூலம் ஒரு குறுஞ்செய்தி சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி இந்த ஐ.பி.எல் தொடரில் தான் தக்கவைக்கப்பட்டால் 16 கோடி ரூபாய் ஊதியம் கொடுக்க வேண்டும் என்பதனால் பெரிய தொகை வீணாவதை சுட்டிக்காட்டி இந்தத் தொடரில் தன்னை தக்கவைக்க வேண்டாம் என டோனி தகவல் அனுப்பியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

ஆனாலும் டோனி நிச்சயம் தக்கவைக்கப்படுவார் என்று சென்னை அணி நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன் ஐ.பி.எல் கிண்ணத்தை சென்னையில் வைத்து பூஜை நடத்திய அதன் உரிமையாளர் ஸ்ரீனிவாசன் கூறுகையில், ‘டோனியில்லாமல் நிச்சயம் சென்னை அணி இருக்காது. எனவே டோனி தக்கவைக்கப்படுவார் என்று கூறியதால் நிச்சயம் டோனி அணியின் முதல் வீரராக தக்கவைக்கப்படவே அதிக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.