Photo: Twitter/CSK
2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு சென்னை சுப்பர் கிங்ஸ் அணி சார்பாக ஒரு கோடி ரூபா பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த நீரஜ் சோப்ரா 87.58 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
இதையடுத்து அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுகள் குவிந்தன.
அதன் ஒரு பகுதியாக ஐ.பி.எல் அணியில் ஒன்றான சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, நீரஜ் சோப்ராவுக்கு ஒரு கோடி ரூபா பரிசுத்தொகையை அறிவித்திருந்தது.
இந்த நிலையில் டெல்லியில் நடைபெற்ற விழாவில், நீரஜ் சோப்ரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதை கௌரவிக்கும் விதமாக 8758 என்ற இலக்கம் பொறிக்கப்பட்ட சென்னை அணியின் ஜேர்சி ஒன்றும், ஒரு கோடிக்கான காசோலையும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி சார்பில் பரிசளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி கே.எஸ். விஸ்வநாதன், ‘நீரஜின் அபார சாதனைக்காக ஒட்டுமொத்த நாடும் பெருமிதம் கொள்கிறது. மெய்வல்லுனர் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றதன் மூலம், அடுத்த தலைமுறைக்கு ஒரு உத்வேகமாகத் திகழ்கிறார்.
87.58 என்பது இந்திய விளையாட்டு வரலாற்றில் என்றென்றும் பொறிக்கப்படும் ஒரு இலக்கம். இந்த சிறப்பு ஜேர்சியை நீரஜுக்கு வழங்குவது எங்களுக்கு ஒரு மரியாதை. அவர் தேசத்திற்கு மேலும் பெருமை சேர்க்க விரும்புகிறோம்’ என்று தெரிவித்தார்.