January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாகிஸ்தான் வெற்றிக் கொண்டாட்டம்: 3 முஸ்லிம் மாணவர்கள் இந்தியாவில் கைது!

Photo: Twitter/Pakistan Cricket

இந்தியாவுக்கு எதிரான டி- 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதை கொண்டாடிய ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த 3 மாணவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அத்துடன், குறித்த மாணவர்கள் மீது சட்ட விரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

டி- 20 உலகக் கிண்ணத் தொடரில் இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி முதன் முறையாக வென்று சாதனை படைத்தது. எனவே இந்த வரலாற்று வெற்றியை அந்த நாட்டு மக்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்.

அதேபோல, இந்தியாவிலும் சில பகுதிகளிலும் இவ்வாறான வெற்றிக் கொண்டாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டம் பிச்புரி கிராமத்தில் உள்ள ராஜா பல்வந்த் சிங் பொறியியல் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் தங்கிப் படிக்கும் காஷ்மீரைச் சேர்ந்த முஸ்லிம் மாணவர்கள் மூன்று பேர், டி-20 உலகக் கிண்ணத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணியை புகழ்ந்து கோஷங்கள் எழுப்பியும், வாட்ஸ்அப்பில் பதிவுகளைப் போட்டும் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதனால் சம்பந்தப்பட்ட மாணவர்கள் மூன்று பேரையும் கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளனர். அத்துடன், குறித்த மாணவர்கள் மீது UAPA சட்டத்தின் கீழ் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், கைது செய்யப்பட்டுள்ள மாணவர்கள் மூவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்று ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவுக்கு அந்த யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் அமைந்துள்ள நீர்ஜா மோடி என்ற பாடசாலையில் நபீசா அட்டாரி என்ற பெண் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இந்தியாவுக்கு எதிரான டி 20 போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. ‘நாம் வெற்றி பெற்று விட்டோம்’ என ஆசிரியை தனது வாட்ஸ்அப் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த தகவலை அறிந்த பாடசாலை நிர்வாகம், ஆசிரியை நபீசா அட்டாரியை பணிநீக்கம் செய்துள்ளது.

இந்த நிலையில், தேச ஒற்றுமைக்கு எதிராக செயல்பட்டதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்.

இது இவ்வாறிருக்க, டி- 20 உலகக் கிண்ணத்தில் இந்தியாவை வீழ்த்திய பாகிஸ்தான் அணியின் வெற்றியை கொண்டாடியவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பாயும் என உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.