July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய அணியின் ஆலோசகராக இணைந்தார் டோனி

Photo: Twitter/BCCI

டி- 20 உலகக் கிண்ணத்துக்கான இந்திய அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் தலைவர் எம்.எஸ். டோனி துபாயில் இந்திய அணியுடன் இணைந்து கொண்டார்.

ஐ.சி.சி. டி- 20 உலகக் கிண்ணத் தொடர் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

தற்போது சுப்பர் 12 சுற்றில் இடம்பெறும் அணிகளுக்கான தகுதிகாண் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இம்முறை டி- 20 உலகக் கிண்ணத்தில் இங்கிலாந்து, இந்தியா, அவுஸ்திரேலியா உட்பட தரவரிசையில் முதல் 8 இடங்களைப் பிடித்த அணிகள் நேரடியாக சுப்பர் 12 சுற்றில் விளையாடுகின்றன.

இந்திய அணி சுப்பர் 12 சுற்றில் தனது முதலாவது போட்டியில் பாகிஸ்தானை எதிர்வரும் 24 ஆம் திகதி சந்திக்கிறது.

இந்த நிலையில், டி- 20 உலகக் கிண்ணத் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.

அப்போது இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் தலைவர் எம்.எஸ். டோனி நியமிக்கப்பட்டார்.

இந்திய கிரிக்கெட் அணிக்கு 2007 ஆம் ஆண்டு டி- 20 உலகக் கிண்ணத்தில் தலைமை தாங்கிய டோனி முதல் முறையாக டி- 20 உலகக் கிண்ணத்தை பெற்றுத் தந்தார்.

எனவே அவரது அனுபவம் இந்திய அணிக்கு பேருதவியாக இருக்கும் என்பதால் பி.சி.சி.ஐ இத்தகைய முடிவு எடுத்துள்ளது.

இதனிடையே, டோனி தலைமையிலான சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, இம்முறை ஐ.பி.எல் சம்பியன் பட்டத்தையும் வென்றதால் டோனி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இது இவ்வாறிருக்க, இந்தியா விளையாடுகின்ற டி- 20 உலகக் கிண்ணத்தின் முதல் பயிற்சி ஆட்டம் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்றது.

இந்நிலையில், இந்திய அணியினருடன் இணைந்த டோனி வீரர்களுக்கு துடுப்பாட்ட ஆலோசனைகளை வழங்கினார்.

அந்தப் புகைப்படங்களை பி.சி.சி.ஐ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. மேலும் ‘இந்திய அணியின் புதிய பொறுப்புக்கு வரவேற்கிறோம்’, புதிய பணியுடன் இந்திய அணியில் டோனி மீண்டும் இணைந்து விட்டார்’ என பதிவிடப்பட்டுள்ளது.