January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டி-20 உலகக் கிண்ணம்: பங்களாதேஷை தோற்கடித்தது ஸ்கொட்லாந்து

Photo: ICC/Twitter

டி-20 உலகக் கிண்ணத் தொடரின் முதல் சுற்றின் 2 ஆவது போட்டியில் பங்களாதேஷ் அணியை 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஸ்கொட்லாந்து அணி வீழ்த்தியது.

டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் சுற்றுப் போட்டிகள் ஒக்டோபர் 17 ஆம் திகதி ஆரம்பமாகியது.

இந்த சுற்றில் பங்கேற்றுள்ள 8 அணிகள் 2 பிரிவுகளாக பிரிந்து மோதுகின்றன. இதில் நேற்று நடைபெற்ற பி குழுவிற்கான 2 ஆவது போட்டியில் ஸ்கொட்லாந்து – பங்காளதேஷ் அணிகள் மோதின.

ஓமான், மஸ்கட், அல் அமீரத் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணியில் அதிகபட்சமாக கிறிஸ் கிரீவ்ஸ் 45 ஒட்டங்கள் விளாசினார். மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க, ஸ்கொட்லாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 140 ஓட்டங்களை எடுத்தது.

பங்காளதேஷ் அணி தரப்பில் அதிகபட்சமாக மெஹிதி ஹசன் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதனையடுத்து 141 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பங்காளதேஷ் அணியின் ஆரம்ப வீரர்கள் லிட்டன் தாஸ், சவுமிய சர்கார் ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

ஸ்கொட்லாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பங்காளதேஷ் அணி வீரர்கள் திணறினர். அந்த அணியின் முஷ்பிகுர் ரஹீம் மாத்திரம் அதிகபட்சமாக 38 ஓட்டங்கள் எடுத்தார்.

இறுதியில் பங்காளதேஷ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 134 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து 6 ஓட்டங்களால் அதிர்ச்சித் தோல்வியைத் தழுவியது.

ஸ்கொட்லாந்து தரப்பில் அதிகபட்சமாக பிரெட் வீல் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதன்மூலம் நடப்பு உலக கோப்பை தொடரில் ஸ்கொட்லாந்து அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.

இதுவரை நடைபெற்ற டி-20 உலகக் கிண்ணத் தொடர்களில் அந்த அணி பெறும் இரண்டாவது வெற்றி இதுவாகும், முன்னதாக 2012 டி-20 உலகக் கிண்ணத்தில் இதே பங்களாதேஷ் அணியை ஸ்கொட்லாந்து அணி வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆட்டநாயன் விருதை கிறிஸ் க்றீவ்ஸ் வென்றெடுத்தார்.