January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொல்கத்தாவை வீழ்த்தி நான்காவது முறையாகவும் ஐ.பி.எல்.கிண்ணத்தை வென்றது சென்னை

photo:Chennai Super Kings_twitter

கொல்கத்தா அணியை வீழ்த்தி நான்காவது முறையாகவும் ஐ.பி.எல்.கிண்ணத்தை சென்னை அணி கைப்பற்றியுள்ளது.

துபாயில் நடந்த ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

நாணய சுழற்சியில் வென்ற கொல்கத்தா அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 192 ஓட்டங்கள் எடுத்தது. கெய்க்வாட் 32 ஓட்டங்கள், உத்தப்பா 31 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். பவுண்டரி, சிக்சர்களாக பறக்கவிட்ட டூ பிளெசிஸ் 86 ஓட்டங்கள் குவித்து கடைசி பந்தில் அவுட் ஆனார். மொயீன் அலி 37 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இதையடுத்து 193 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அதிரடியாக ஆடினர். வெங்கடேஷ் ஐயர் 50 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நிதிஷ் ரானா டக் அவுட்டானார். சுனில் நரேன் 2 ஓட்டத்தில் வெளியேறினார். ஷுப்மான் கில் 51 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த வீரர்கள் விரைவில் ஆட்டமிழக்க, இறுதியில் கொல்கத்தா அணி 9 விக்கெட் இழப்புக்கு 165 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது. இதன்மூலம் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. அத்துடன் நான்காவது முறையாக ஐ.பி.எல் கிண்ணத்தை சென்னை அணி கைப்பற்றியது.

சென்னை அணி சார்பில் ஷர்துல் தாக்குர் 3 விக்கெட், ஹேசில்வுட், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், தீபக் சாஹர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

டோனி சாதனை

இந்த போட்டியில் விளையாடியதன் மூலம் எம்.எஸ்.டோனி 20 ஓவர் கிரிக்கெட்டில் 300 போட்டிகளில் கப்டனாக செயல்பட்ட முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.

இந்தியாவுக்காக கப்டன் பொறுப்பிலிருந்து 41 வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளார். இதில் தான் கப்டன் பொறுப்பு வகித்த ஆரம்ப கட்டத்திலே இந்தியாவுக்கு முதல் இருபது ஓவர் உலகக்கிண்ணத்தை பெற்றுக்கொடுத்த (2007) பெருமையும் அடங்கும்.

இந்தப் பட்டியலில் மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த டேரன் சமி டி- 20 போட்டிகளில் 208 ஆட்டங்களில் கப்டனாக செயல்பட்டு இரண்டாவது இடத்தில் உள்ளார். இவர்களை தொடர்ந்து இந்தியாவின் விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் ஆகியோர் முறையே 170 மற்றும் 153 ஆட்டங்களுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

இறுதிப் போட்டியில் வழங்கப்பட்ட விருதுகள்:

ஆட்ட நாயகன் விருது – சென்னை அணியின் பாப் டுபிளெஸிசுக்கு வழங்கப்பட்டது.

எமர்ஜிங் பிளேயர் – ருதுராஜ் கெய்க்வாட்

கேம் சேஞ்சர் விருது – ஹர்ஷல் படேல்

சூப்பர் ஸ்டிரைக்கர் விருது – ஹெட்மையர்

அதிக சிக்சருக்கான விருது – கே.எல்.ராகுல்

பவர் பிளேயர் விருது – வெங்கடேஷ் ஐயர்