July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“எங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது”; ஜப்னா ஸ்டாலியன்ஸ் குற்றச்சாட்டு

கடந்த ஆண்டின் லங்கா பிரீமியர் லீக்கில் வென்ற சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்வதற்கான வாய்ப்பை இல்லாமல் செய்து, தம்மை இந்த ஆண்டு தொடரில் இருந்து வெளியேற்றியது மிகப்பெரிய அநீதி என ‘ஜப்னா ஸ்டாலியன்ஸ்’ அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எனினும், இலங்கையின் பின்தங்கிய கிராமங்களில் கிரிக்கெட் விளையாட்டை அபிவிருத்தி செய்வதற்கு ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி நிர்வாகம் தொடர்ந்து பங்களிப்புச் செய்யும் என அந்த அணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தமது அணிக்கு அநீதி இழைக்கப்பட்ட போதிலும், இந்த நாட்டில் உள்ள இளம் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட்டை விரும்பும் மக்களுக்கு லங்கா பிரிமியர் லீக்  தொடரானது உலகின் முன்னணி லீக் தொடர்களில் ஒன்றாக அமைய வேண்டும் என பிராத்தனை செய்வதாகவும் அந்த அணி மேலும் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு முதல் முறையாக நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக் தொடரில் சம்பியன் பட்டத்தை ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி வென்றது.

அந்த அணியை பிரித்தானியா மற்றும் அமெரிக்காவில் வசித்து வருகின்ற இலங்கை வம்சாவளி தொழிலதிபர்கள் சிலர் வாங்கியிருந்தனர்.

எவ்வாறாயினும், முதலீடுகள் மற்றும் போட்டியை நடத்தும் ஐபிஜி நிறுவனத்தின் சட்ட வரையறைகளை மீறிய குற்றச்சாட்டில் அந்த அணியின் உரிமைத்துவத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதனையடுத்து, இந்த ஆண்டு லங்கா பிரீமியர் லீக்கில் ஜப்னா அணியின் உரிமைத்துவத்தை லைக்கா குழும நிறுவனத்தின் தலைவரான அல்லிராஜா சுபாஸ்கரன் வாங்கியதாக உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.