July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கிரிக்கெட்டில் களமிறங்குகிறார் ரோஹித ராஜபக்‌ஷ

Photo: Facebook/ Rohitha Rajapaksa 

பிரதமர் மகிந்த ராஜபக்‌ஸவின் கடைசி புதல்வாரன ரோஹித ராஜபக்‌ஷ, இந்த ஆண்டுக்கான உள்ளூர் கழகங்களுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபையினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள 2021/22 பருவ காலத்துக்கான உள்ளூர் முதல்தர கழகங்கள் மோதும் ஒருநாள் தொடர் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இதனிடையே, இந்தப் போட்டித் தொடரில் களுத்துறை நகர சபை கழகத்தில் ரோஹித ராஜபக்‌ஸ இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இப்போட்டிகளில் பங்கேற்பதற்காக மக்கொனையில் அமைந்துள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் அவர் கடந்த இரண்டு நாட்களாக பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகிறது.

இந்த நிலையில், களுத்துறை நகர விளையாட்டு கழக அணியை தெரிவு செய்வதற்காக பயிற்சி போட்டியொன்று நேற்றைய தினம் (13) நடைபெற்றுள்ளதுடன், இந்தப் பயிற்சிப் போட்டியில் ரோஹித ராஜபக்‌ஷவும் பங்கேற்றிருந்ததாக தெரிய வருகிறது.

இது இவ்வாறிருக்க, களுத்துறை நகர சபை கழகத்தின் தலைவர் தீபால் பெரேரா இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,

ரோஹித ராஜபக்‌ஸ எமது அணியுடன் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். எனினும், அவர் இதுவரையிலும் அவரது பெயரை எமது கழகத்தில் பதிவு செய்யவில்லை. எவ்வாறாயினும், அவர் எமது கழகத்தில் பதிவாகி, இப்போட்டித் தொடரில் எமது கழகத்துக்காக விளையாடுவதை எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பதுரலிய விளையாட்டுக் கழகத்தின் பயிற்சியாளருமான ஜீவன் மெண்டிஸின் முயற்சியில் ரோஹித ராஜபக்‌ஷ இவ்வாறு கிரிக்கெட் பயிற்சிகளை ஆரம்பித்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இது இவ்வாறிருக்க, இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்துடன் தனது பெயரை தொடர்புபடுத்தி ஊடகங்களில் வெளியான செய்திகளை ரோஹித ராஜபக்‌ஷ மறுத்துள்ளார்.

கிரிக்கெட்டில் ஈடுபடவோ அல்லது இந்த ஆண்டு லங்கா பிரீமியர் லீக் தொடரில் விளையாடவோ விரும்பவில்லை என்று அறிக்கை ஒன்றின் மூலம் அவர் கூறியுள்ளார்.

கல்கிஸ்ஸை புனித தோமஸ் கல்லூரியின் பழைய மாணவரான ரோஹித ராஜபக்‌ஷ CH&FC றக்பி கழகத்துக்காக விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.