July 2, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

லங்கா பிரீமியர் லீக் 2021: வீரர்கள் ஏலத்தில் 74 வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பு

லங்கா பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது அத்தியாயத்துக்கான வீரர்கள் ஏலத்தில் 74 வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்கவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

எல்.பி.எல் தொடரின் இரண்டாவது சீசனுக்கான வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களை இணைத்துக் கொள்ள பதிவு செய்யும் காலம் செப்டம்பர் 24 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு ஒக்டோபர் 7 ஆம் திகதி முடிவடைந்தது.

இதன்படி, இம்முறை எல்.பி.எல் தொடரில் பங்கேற்க மொத்தம் 699 கிரிக்கெட் வீரர்கள் தமது பெயர்களை பதிவு செய்துள்ளனர்.

அக்டோபர் 27 ஆம் திகதி நடைபெறும் வீரர்கள் ஏலத்துக்கு விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்ட 225 வீரர்கள் அடங்கிய பட்டியலை இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.

அத்துடன், இம்முறை ஏலத்தில் 74 வெளிநாட்டு வீரர்களின் பெயர்களை இணைத்துக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இப்போட்டி தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 6 வெளிநாட்டு வீரர்களை எடுத்துக் கொள்ள முடிவதுடன், விளையாடும் பதினொருவரில் அதிகபட்சமாக 4 வெளிநாட்டு வீரர்களை பங்கேற்க செய்ய முடியும்.

இந்த போட்டித் தொடரில் பங்கேற்பதற்காக நட்சத்திர வீரர்களான கிறிஸ் கெய்ல், அண்ட்ரே ரசல், டேவிட் மலான், பாப் டூ பிளெஸ்சிஸ், இம்ரான் தாஹிர், சஹீட் அப்ரிடி உள்ளிட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

மேலும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான இர்பான் பதான், யூசுப் பதான், இங்கிலாந்தின் லியெம் பிளங்கெட், ஆதில் ரஷீட் உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்கள் இப்போட்டி தொடரில் பங்கேற்பதற்காக விண்ணப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.