July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐ.பி.எல் 2021: தோல்வியுடன் பெங்களூர் அணியிலிருந்து விடை பெற்றார் விராட் கோலி

Photo: Twitter/IPL

ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிரான எலிமினேட்டர் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐ.பி.எல் தொடரில் திங்கட்கிழமை  (11) நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின.

நாணய சுழற்சியில் வென்ற பெங்களூர் அணி முதலில் துடுப்பாட்டத்தில் ஈடுபட தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய பெங்களூர் அணி சுனில் நரைனின் அபாரமான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 138 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.

இதில் அதிகபட்சமாக விராட் கோலி 39 ஓட்டங்களை எடுக்க, கொல்கத்தா அணி தரப்பில் சுனில் நரைன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இதையடுத்து எளிய இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி, நிதானமாக விளையாடி 19.4 ஓவர்களில் இலக்கை எட்டி, 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி ஐ.பி.எல் 14 ஆவது சீசனின் இரண்டாவது தகுதிச்சுற்று போட்டிக்கு தகுதி பெற்றது.

இதன்படி, நாளை மறுநாள் (13) நடைபெறும் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை கொல்கத்தா அணி எதிர்கொள்கிறது.

இதேவேளை, பெங்களூர் அணிக்காக தலைவராக செயல்பட்ட விராட் கோலி தோல்வியுடன் தலைவர் பதவிக்கு விடை கொடுத்தார்.