July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐ.பி.எல் 2021: பெங்களூர் அணியிலிருந்து இலங்கை வீரர்கள் விடுவிப்பு

Photo: Twitter/IPL

டி- 20 உலகக் கிண்ணத்தில் பங்கேற்பதற்காக ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியைச் சேர்ந்த துஷ்மந்த சமீர, வனிந்து ஹஸரங்க ஆகிய இருவரும் ஐ.பி.எல் தொடரிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

டி- 20 உலகக் கிண்ணம் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமானில் ஒக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது.

இதில் முதலில் தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெறவுள்ளதுடன், அதிலிருந்து தேர்வாகும் நான்கு அணிகள், ஏற்கெனவே தேர்வான 8 அணிகளுடன் இணைந்து பிரதான சுற்றான சுப்பர் 12 இல் ஒக்டோபர் 23 ஆம் திகதி முதல் விளையாடவுள்ளன.

இதேநேரம், ஒக்டோபர் 17 ஆம் திகதி முதல் டி- 20 உலகக் கிண்ணத்தின் தகுதிச் சுற்றுப் போட்டிகள் ஆரம்பமாகின்றன.

இதில் நமீபியா, அயர்லாந்து, நெதர்லாந்து ஆகிய அணிகளுடன் இலங்கை மோதவுள்ளது. அக்டோபர் 18 இல் நமீபியாவுக்கு எதிராக தனது முதல் போட்டியில் இலங்கை விளையாடுகிறது.

இந்த நிலையில், டி- 20 உலகக் கிண்ணத்தில் பங்கேற்பதற்காக ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இடம்பெற்றுள்ள இலங்கை வீரர்களான துஷ்மந்த சமீரா, வனிந்து ஹஸரங்க ஆகிய இருவரும் ஐ.பி.எல் போட்டியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, குறித்த இருவரும் கொவிட்- 19 கட்டுப்பாட்டு வலயத்தை விட்டு வெளியேறியதை பெங்களூர் அணி நிர்வாகம் உறுதி செய்துள்ளது.

ஐ.பி.எல் தொடரில் இரண்டாவது பாதியில் பெங்களூர் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்ட துஷ்மந்த சமீர, வனிந்து ஹஸரங்க ஆகிய இருவரில் வனிந்து ஹஸரங்க மாத்திரம் இரண்டு போட்டிகளில் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.