November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐ.பி.எல் 2021: டெல்லியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது சென்னை அணி

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 9 ஆவது முறையாக ஐ.பி.எல் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.

ஐ.பி.எல் தொடரில் நடைபெற்ற முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – சென்னை சுப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.

இதில் நாணய சுழற்சியில் வென்ற சென்னை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு பிரித்வி ஷா, ரிஷப் பாண்ட் ஆகியோர் அரைச் சதம் அடித்து அணியின் ஓட்ட எண்ணக்கையை உயர்த்தினர். இதன் மூலம் டெல்லி அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 172 ஓட்டங்களை எடுத்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக பிரித்வி ஷா 60 ஓட்டங்களையும், ரிஷப் பாண்ட் 51 ஓட்டங்களையும் குவித்தனர்.

சென்னை அணி தரப்பில் ஜோஸ் ஹசில்வுட் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதையடுத்து கடின இலக்கை துரத்திய சென்னை அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. இந்த சீசன் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பாப் டூ பிளெசிஸ் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

அதன்பின் ஜோடி சேர்ந்த ருதுராஜ் கெய்க்வாட் – ரொபின் உத்தப்பா ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினர். இரண்டாவது விக்கெட்டுக்கு இருவரும் 100 ஓட்டங்களைப் பெற்று வலுச்சேர்த்தனர். இதில் உத்தப்பா அரைச் சதம் அடித்து அசத்தினார்.

அதன்பின் 63 ஓட்டங்களுடன் ரொபின் உத்தப்பா ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஷர்துல் தாக்கூர், அம்பத்தி ராயுடு ஆகியோர் வந்த வேகத்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் போட்டி பரபரப்பாகச் சென்றது.

இதற்கிடையில் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் கெய்க்வாட் அரைச் சதம் கடந்து, அதிரடியில் மிரட்டி வந்தார்.

அதன்பின் 70 ஓட்டங்களில் ருதுராஜ் ஆட்டமிழக்க, ஆட்டத்தில் அனல் பறந்தது. இதனால் இப்போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.

இதனால் கடைசி ஓவரில் சென்னை அணி வெற்றி பெற 13 ஓட்டங்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. அந்த ஓவரை வீசிய டொம் கரண் முதல் பந்திலேயே மொயின் அலியின் விக்கெட்டைக் கைப்பற்றி அசத்தினார்.

அதன்பின் மகேந்திர சிங் டோனி அடுத்தடுத்து 3 பவுண்டரிகளை விளாசி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

இதன் மூலம் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி, 9 ஆவது முறையாக ஐ.பி.எல் இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.

டெல்லி அணி திங்கட்கிழமை நடைபெறுகின்ற எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெறும் அணியுடம் புதன்கிழமை மோதவுள்ளது.