July 1, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டி-20 உலகக் கிண்ணம்: மைதானத்தில் 70 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி!

டி-20 உலகக் கிண்ணப் போட்டிகளை பார்வையிடுவதற்காக மைதானங்களில் 70 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த ஆண்டு நடைபெறவுள்ள டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான டிக்கெட் விற்பனை தற்போது ஆரம்பமாகியிருப்பதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி) அறிவித்துள்ளது.

16 நாடுகளின் கிரிக்கெட் அணிகள் பங்குபெறுகின்ற 7ஆவது ஆடவர் டி-20 உலகக் கிண்ணத் தொடரின் போட்டிகள் இம்மாதம் 17ஆம் திகதி தொடக்கம் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளில் நடைபெறுகின்றன.

அதன்படி இந்த டி-20 உலகக் கிண்ணத் தொடரில் மொத்தமாக 45 போட்டிகள் நடைபெறவுள்ளதோடு ஒவ்வொரு போட்டிக்குமான டிக்கெட்டுக்களையும் ஐ.சி.சி இன் உத்தியோகபூர்வ இணையதளங்களில் ஒன்றான https://www.t20worldcup.com/tickets  இல் கொள்வனவு செய்து கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கொரோனா வைரஸ் காரணமாக ஐக்கிய அரபு இராச்சியத்தில், இம்முறை டி-20 உலகக் கிண்ணத் தொடருக்காக நடைபெறவுள்ள போட்டிகள் அனைத்தினையும் பார்வையிட 70 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளதோடு, ஓமானில் நடைபெறுகின்ற போட்டிகளைப் பார்வையிட 3000 பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

அதேநேரம், டி-20 உலகக் கிண்ணத் தொடருக்கான டிக்கெட்டுக்களின் விலைகள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் 30 திர்ஹம்களில் (இலங்கை பணப்பெறுமதியில் 1,600 ரூபா) இருந்தும், ஓமானில் 10 ரியால்களில் (இலங்கை பணப்பெறுமதியில் 5,100 ரூபா) இருந்தும் ஆரம்பிக்கின்றன.

இந்த டி-20 உலகக் கிண்ணத் தொடரின் போட்டிகள் நடைபெறும் போது, பார்வையாளர்கள் இடையே கொவிட்-19 வைரஸ் தடுப்பு விதிமுறைகள் அனைத்தும் கடைப்பிடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.