Photo:Twitter/ IPL
ஐ.பி.எல் போட்டிகள் வரலாற்றில் 200 போட்டிகளுக்கு தலைவராக செயற்பட்ட முதல் வீரர் என்ற பெருமையை சென்னை சுப்பர் கிங்ஸ் அணித்தலைவர் எம்.எஸ் டோனி பெற்றுக்கொண்டார்.
சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக நேற்று நடைபெற்ற 47 ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதேவேளை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் தற்போது சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான எம்.எஸ். டோனி, நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணிக்காக 200ஆவது ஐ.பி.எல் போட்டியில் தலைமை தாங்கினார்.
இதன்மூலம் ஐ.பி.எல் போட்டிகளில் ஒரு அணிக்காக 200 போட்டிகளில் தலைவராக செயற்பட்ட முதல் வீரர் என்ற பெருமை டோனி வசமானது.
இதுவரைக்கும் 200 போட்டிகளில் தலைவராகச் செயல்பட்டு, 119 போட்டிகளில் வெற்றிகளையும், 80 போட்டிகளில் தோல்விகளையும் சென்னை அணிக்கு டோனி பெற்றுக் கொடுத்துள்ளார்.
இதேவேளை, சார்ஜாவில் கடந்த 30 ஆம் திகதி நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியின் 44ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வீழ்த்தியது.
இந்த வெற்றியின்மூலம் புள்ளிப் பட்டியலில் சென்னை அணி 18 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்து, ஐ.பி.எல் தொடரில் 11ஆவது தடவையாக பிளே-ஆப் சுற்றுக்குத் தகுதிபெற்றது.
குறித்த போட்டியில் எம்.எஸ் டோனி 3 பிடியெடுப்புகளை எடுத்து ஐ.பி.எல் தொடரில் சென்னை அணிக்காக விக்கெட் காப்பாளராக இருந்து 100 பிடியெடுப்புகளை எடுத்து சாதனை படைத்தார்.