July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நியூசிலாந்துக்கு பதிலாக இலங்கைக்கு அழைப்பு விடுத்துள்ள பாகிஸ்தான்

Photo: PCB Twitter

நியூசிலாந்து சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுடன் குறுகிய கிரிக்கெட் தொடரொன்றை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கவனம் செலுத்தியுள்ளது.

எனினும், இரு நாட்டு வீரர்களும் ஐ.பி.எல் மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாட இருப்பதனால் எந்தவொரு தொடரையும் திட்டமிட முடியவில்லை என அந்நாட்டு கிரிக்கெட் சபையின் நிறைவேற்று அதிகாரி வசீம் கான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

நியூசிலாந்து தொடர் திடீரென ரத்து செய்யப்பட்டதை அடுத்து இலங்கை கிரிக்கெட் சபை மற்றும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபைகளுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தினோம்.அப்போது இரு நாட்டு கிரிக்கெட் சபைகளும் பாகிஸ்தானில் வந்து விளையாட விருப்பம் தெரிவித்தன.ஆனால்,இரு அணிகளையும் சேர்ந்த முக்கிய வீரர்கள் தற்போது அணியுடன் இல்லை என தெரிவித்தது.

குறிப்பாக எமது தலைவர் இரு நாட்டு சபைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு குறுகிய சுற்றுப் பயணத்தை மேற்கொள்வதற்கான சாத்தியம் குறித்து ஆராய்ந்தார்.அவர்கள் எமது கோரிக்கையை ஏற்றுக் கொண்டனர்.ஆனால் அவர்கள் ஏற்கனவே டி-20 உலகக் கிண்ணத்துக்காக உறுதிப்படுத்தப்பட்ட திட்டங்களை மாற்றுவது மிகவும் கடினம் என்று சுட்டிக்காட்டினர்.மேலும் அவர்களது சில வீரர்கள் ஐ.பி.எல் தொடரில் விளையாடி வருவதாகவும்  தெரிவிக்கப்பட்டது.

நியூசிலாந்து கிரிக்கெட் அணி 18 ஆண்டுகளுக்கு பிறகு 3 ஒருநாள் மற்றும் ஐந்து டி-20 போட்டியில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் சென்றது.

இரு அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற இருந்த நிலையில்,நியூசிலாந்து அணி பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக கடைசி நேரத்தில் தொடரை ரத்து செய்து நாடு திரும்பியது.

நியூசிலாந்தின் இந்த முடிவால் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கடும் அதிர்ச்சி அடைந்தது.இது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் புகார் அளிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் சபை முடிவு செய்துள்ளது.

மறுபுறத்தில் அந்நாட்டு முன்னாள் வீரர்கள் பலரும் நியூசிலாந்து கிரிக்கெட்டை கடுமையாக விமர்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது