Photo: ICC Twitter
டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் பதவியிலிருந்து ரஷித் கான் விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி முதல் நவம்பர் 14 ஆம் திகதி வரை டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், டி-20 உலகக் கிண்ண தொடரில் விளையாடும் ரஷித் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் சபை நேற்று வெளியிட்டது.
இதனிடையே, டி-20 உலகக் கிண்ணத் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் பதவியை ரஷித் கான் இராஜினாமா செய்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையில், டி-20 உலகக் கிண்ணத்துக்கான ஆப்கானிஸ்தான் அணி விபரத்தை வெளியிடுவதற்கு முன்னதாக, தலைவர் என்ற முறையில் என்னை அழைத்து பேசியிருக்க வேண்டும். என்னிடம் ஆலோசிக்காமல் அணி தெரிவு செய்யப்பட்டுள்ளதால் தலைவர் பதவியிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்தேன் என அவர் கூறியுள்ளார்.
இது இவ்வாறிருக்க, ரஷித் கான் தலைவர் பதவியை இராஜினாமா செய்ததையடுத்து ஆப்கானிஸ்தான் அணியின் தலைவராக மொஹமட் நபி செயல்படுவார் என அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.