January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பராலிம்பிக் பதக்கப் பட்டியலில் இலங்கைக்கு 57ஆவது இடம்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வந்த மாற்றுத் திறனாளிகளுக்கான 16 ஆவது பாராலிம்பிக் விளையாட்டு விழா நேற்று (05) கோலாகலமாக நிறைவடைந்தது.

இலங்கையைப் பொறுத்தமட்டில் இந்த விளையாட்டு விழா வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.

ஏனெனில்,இந்த பராலிம்பிக் விளையாட்டு விழாவில்தான் இலங்கை முதல் தடவையாக தங்கப் பதக்கத்தால் அலங்கரிக்கப்பட்டது. அத்துடன் ஒலிம்பிக்கை ஒத்த உலக விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றில் இலங்கையின் தேசிய கீதம் இசைக்கப்பட்டதும் இதுவே முதல் தடவையாகும்.

டோக்கியோ பராலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கையின் தினேஷ் பிரியன்த ஹேரத், ஆண்களுக்கான F46 பிரிவு ஈட்டி எறிதலில் உலக சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்ததுடன், சமித்த துலான் கொடிதுவக்கு ஆண்களுக்கான F64 பிரிவு ஈட்டி எறிதலில் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

இதன்படி, 162 நாடுகள் பங்குபற்றிய பராலிம்பிக் விழாவின் முடிவில் பதக்கப்பட்டியலில் இலங்கை ஒரு தங்கம், ஒரு வெண்கலம் என இரண்டு பதக்கங்களுடன் 57ஆவது இடத்தைப் பிடித்து புதிய சரித்திரம் படைத்தது.

இதற்கு முன்பு 2012 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பராலிம்பிக் விளையாட்டு விழாக்களில் முறையே ஒரு வெண்கலப் பதக்கத்தை பெற்றிருந்ததே சாதனையாக இருந்தது.

இதேவேளை, டோக்கியோ பராலிம்பிக்கில் பதக்கம் வென்ற இலங்கை வீரர்கள் உட்பட ஒட்டுமொத்த இலங்கை அணி நாளை மாலை (07) நாட்டை வந்தடையவுள்ளனர்.

இதன்போது, பதக்கம் வென்ற வீரர்களுக்கு விமான நிலையத்தில் வைத்து மகத்தான வரவேற்பளிக்க விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன், விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் பங்குபற்றலுடன் விசேட வரவேற்பு நிகழ்ச்சியொன்றும் அங்கு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறிருக்க, இம்முறை பராலிம்பிக் பதக்கப்பட்டியலில் மொத்தம் 86 நாடுகள் இடம்பிடித்தன. முதல் நாளில் இருந்தே முழுமையாக ஆதிக்கம் செலுத்திய சீனா 96 தங்கம், 60 வெள்ளி, 51 வெண்கலம் என்று 207 பதக்கத்துடன் முதலிடத்தை பிடித்தது.

பிரித்தானியா 41 தங்கம், 38 வெள்ளி, 45 வெண்கலப் பதக்கங்களுடன் 2 ஆம் இடத்தையும் ஐக்கிய அமெரிக்கா 37 தங்கம், 36 வெள்ளி, 31 வெண்கலப் பதக்கங்களுடன் 3 ஆம் இடத்தையும் பெற்றன.