இலங்கையில் 2019 முதல் இன்றுவரை 1215 பில்லியன் ரூபா நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இன்று நாடு பெரும் நெருக்கடியில் உள்ளது. 2019 டிசம்பரில் அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இருந்த விலையையும், இந்த ஆண்டு ஆகஸ்டில் 20 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது விலைகள் உச்சத்தை தொட்டுள்ளன.
2019 இல் கீரி சம்பா 88 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், இன்று 150 ரூபாவாக உள்ளது. 2019 இல் நாட்டரிசி 94 ரூபா இப்போது ரூ.110,120 ரூபா. அதேபோல, சிவப்பரிசி 2019 இல் 85 ரூபா இன்று 100 ரூபா.
அரிசி தான் அவ்வாறு என்றால் சீனி மோசடியால் 2019 இல் 100 ரூபாவாக இருந்தது இன்று 220 ரூபாவாக உள்ளது. 40 ரூபாவிற்கு இருந்த தேங்காய் இன்று 90 ரூபாவாக உள்ளது.2019 இல் 320 ரூபாவாக இருந்த தேங்காய் எண்ணெய் இன்று 710 ரூபாய்க்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எனவே, இன்று அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளும் உயர்ந்துள்ளன.மேலும் மக்கள் வாழ்க்கைச் செலவை தாங்க முடியாத அளவுக்கு கிட்டத்தட்ட 100 வீதம் பொருட்களின் விலை உயர்ந்துதுள்ளது.
இவற்றுக்கு ஐந்து முக்கிய காரணங்கள் உண்டு. பணம் அச்சடிப்பது முதலாவது காரணமாகும். 2019 முதல் இதுவரையான குறுகிய காலத்தில் 1215 பில்லியன் ரூபா பணத்தாள்கள் மத்திய வங்கியினால் அச்சிடப்பட்டுள்ளது.
நல்லாட்சியில் 80 ஆக இருந்தது இன்று 1215 ஆக உயர்ந்துள்ளது. அவ்வாறு அச்சடிப்பதாலயே அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன.இன்று அதிவேக வீதி,வரத்து நிர்மாணம் ,நடைபாதை நிர்மாணம் என்று பட்டியல் நீண்டு செல்கிறது. இதனால் மக்கள் தான் இதன் சிரமங்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.
பொருட்களின் விலை உயர்வுக்கு இரண்டாவது காரணி,அரசாங்கத்தின் தவறான நிதிக் கொள்கையின் காரணமாக ஏற்பட்டுள்ள டொலர் பற்றாக்குறை ஆகும். மூன்றாவது காரணம் உரங்கள் மற்றும் இரசாயனப் பொருட்களை இறக்குமதி செய்ய விடுத்த தீர்மானத்தால் ஏற்பட்ட நெருக்கடியாகும்.
நான்காவது காரணம் பொது நிதி முறைகேடாகும்.இதனால் 2020 வருடம் மாத்திரம் 523 பில்லியன் இலாபத்தை அரசாங்கம் இழந்தது. இறுதியில், பணம் அச்சிடப்படுவதுதான் வழியாக கையாள்கிறது. ஐந்தாவது காரணம் மக்களின் வருமான இழப்பு.பொது ஊழியர்களைப் பொறுத்தவரை, நல்லாட்சி அரசாங்கத்தால் வழங்கப்படும் சம்பள உயர்வு ஜனவரி 2020 முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
இவையனைத்துக்கும் அரசாங்கத்தின் தவறான பொருளாதார கொள்கையே காரணம். இந்த நிலை எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் இன்னும் மோசமாக மாறும் என்று நாங்கள் கூறுகிறோம்.
கடன்களை அடைக்க டொலர் இருப்புகளைப் பயன்படுத்துகின்றனர்.அத்தியாவசிய கொள்முதலைக் கட்டுப்படுத்துவதால் உணவு,மருந்து, மற்றும் உரங்கள் மீதான தடை காரணமாக ஏற்படும் பஞ்சம்,மக்கள் பட்டினி கிடக்கும் அளவுக்கு பசியால் வாடும் குழந்தைகளுக்கு பால் மா கூட வாங்க முடியாத சிக்கலை எதிர்நோக்குகின்றனர். சௌபாக்கியத்தின் தொலைநோக்கு நாட்டை பெரும் நெருக்கடிக்குள் தள்ளியதாகவும், உணவு பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
முறையான பொருளாதாரத்தை நிர்வகிக்கும் அனுபவமுள்ள மற்றும் அதைப் பற்றி விஞ்ஞான ரீதியாக சிந்திக்கும், இந்த நாட்டை நேசிக்கும், ஊழல் இல்லாத, மக்களிடம் நாட்டின் பொருளாதாரத்தின் நிர்வாகத்தை ஒப்படைப்பதே இந்தப் பிரச்சினைக்கான தீர்வு என்பதை நாங்கள் வலியுறுத்த விரும்புகிறோம்.
எனவே, அரசாங்கத்தின் தவறான நிதி மற்றும் பொருளாதார திட்டங்களால் ஒக்டோபர் மாதத்துக்குள் நாட்டில் கடுமையான பஞ்சம் ஏற்படும் அபாயம் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.