November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உலக கனிஷ்ட மெய்வல்லுனர்: கலப்பு அஞ்சலோட்டத்தில் இலங்கைக்கு ஏழாவது இடம்

Photo: Ceylon Athletics

கென்யாவில் நடைபெறுகின்ற உலக கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் கலப்பு பிரிவினருக்கான 4×400 மீட்டர் அஞ்சலோட்ட இறுதிப் போட்டியில் இலங்கை அணி ஏழாவது இடத்தை பெற்றுக் கொண்டது.

உலக கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் செவ்வாய்க்கிழமை கென்யாவின் நைரோபி நகரில் உள்ள நயயோ விளையாட்டரங்கில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியது.

இந்த நிலையில் போட்டிகளின் முதல் நாளான நேற்று இலங்கை வீரர்கள் சிலர் தமது போட்டிகளில் பங்கேற்றனர்.

இதில், 4×400 மீட்டர் கலப்பு அஞ்சலோட்ட தகுதிச் சுற்றில் இலங்கை வீரர்கள் சிறந்த திறமையினை வெளிப்படுத்தியதன் மூலம் 3 நிமிடங்கள் 26.62 செக்கன்களில் போட்டியை நிறைவு செய்து ஐந்தாவது இடத்தை பெற்றனர்.

இதன்படி, நேரக் கணிப்பீட்டின்படி இலங்கை அணி இறுதிப் போட்டிக்காக தெரிவாகியது.

இந்த நிலையில், நேற்று இரவு (18)நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அஞ்சலோட்ட அணி ஏழாவது இடத்தை பெற்றுக் கொண்டது.

இந்தப் போட்டியில் ரவிந்து டில்ஷான் பண்டார, தருஷி கருணாரட்ன, லக்ஷிமா சயுரி மெண்டிஸ், இசுரு கௌஷல்ய அபேவர்தன என்ற வரிசையில் முதலாவது சுவட்டில் பங்குப்றறிய இலங்கை அணியினர் போட்டியை 3 நிமிடங்கள் 26.39 செக்கன்களில் நிறைவு செய்து புதிய இலங்கை சாதனை படைத்தனர்.

உலக கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் வரலாற்றில் இலங்கை வீரர்கள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றமை இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கடும் போட்டித் தன்மையை ஏற்படுத்திய கலப்பு பிரிவினருக்கான 4×400 மீட்டர் அஞ்சலோட்டப் போட்டியை 3 நிமிடங்கள் 19.70 செக்கன்களில் நிறைவு செய்த நைஜீரிய அணியினர் மைதானத்துக்கான புதிய சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தனர்.

போலந்து அணி (3:19.80) வெள்ளிப் பதக்கத்தை வென்றதுடன், இந்தியா (3:20.60) வெண்கலப் பதக்கத்தை பெற்றது.

மெதானிக்கு ஏமாற்றம்

பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டிக்கான முதலாவது அரை இறுதியில் இலங்கையின் மெதானி ஜயமான்ன 7ஆவது இடத்தைப் பெற்று இறுதிப் போட்டி வாய்ப்பைத் தவறவிட்டார்.

முன்னர் இடம்பெற்ற தகுதிச் சுற்றுப் போட்டியில் போட்டித் தூரத்தை 12.01 செக்கன்களில் நிறைவு செய்த மெதானி ஆறாவது இடத்தைப் பெற்றுக் கொண்டார். எனினும், நேரப் பதிவுக்கு அமைய அவர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இசுருவுக்கு ஏழாவது இடம்

இலங்கையின் மற்றொரு வீரரான இசுரு கௌஷல்ய அபேவர்தன, ஆண்களுக்கான 400 மீட்டர் தகுதிச் சுற்றில் போட்டித் தூரத்தை 48.02 செக்கன்களில் நிறைவு செய்து ஏழாவது இடத்தைப் பெற்றுக் கொண்டார். எனவே, அவருக்கு அரையிறுதிக்கான வாய்ப்பைப் பெற்றுக் கொள்ள முடியாமல் போனது.

மூன்று தகுதிச் சுற்றுப் போட்டிகளிலும் 24 பேர் மொத்தமாக பங்குபற்றியதுடன் இலங்கையின் இசுரு கெஷல்ய ஒட்டுமொத்த நிலையில் 23 ஆவது இடத்தைப் பெற்றார்.