November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டோக்கியோ ஒலிம்பிக்: இலங்கை வீராங்கனை நிமாலிக்கு தோல்வி!

Photo: NOC of Sri lanka

டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 800 மீட்டர் தகுதிச் சுற்று ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய இலங்கை வீராங்கனை நிமாலி லியனஆராச்சி எட்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இதனால் அரை இறுதிக்கான வாய்ப்பை இழந்த நிமாலியின் ஒலிம்பிக் கனவு ஏமாற்றத்துடன் நிறைவுக்கு வந்தது.

ஜப்பானில் நடைபெற்று வருகின்ற டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவின் ஏழாவது நாளான இன்று மெய்வல்லுனர் போட்டிகள் டோக்கியோவின் தேசிய விளையாட்டரங்கில் ஆரம்பமாகின.

இன்று முதல் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள மெய்வல்லுனர் விளையாட்டில் 48 தங்கப் பதக்கங்களுக்கான போட்டி நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

இந்த நிலையில், பெண்களுக்கான 800 மீட்டர் தகுதிச்சுற்றில் இலங்கை வீராங்கனை நிமாலி லியனஆராச்சி களமிறங்கினார்.

ஆறு சுற்றுக்களைக் கொண்ட தகுதிச்சுற்றில் 4 ஆவது சுற்றின் இரண்டாவது சுவட்டில் நிமாலி போட்டியிட்டார்.

போட்டியின் ஆரம்பம் முதல் பின்னடைவை சந்தித்த நிமாலி, இப்போட்டியை 2 நிமிடங்கள் 10.23 செக்கன்களில் நிறைவுசெய்து எட்டாவது இடத்தைப் பெற்றார்.

இதனிடையே நிமாலி பங்குபற்றிய தகுதிச்சுற்றில் அமெரிக்காவின் ரெவின் ரொட்ஜர்ஸ் (2 நிமிடங்கள் 01.42 செக்.) முதலிடத்தையும், பிரித்தானியாவின் கீலி ஹொட்ஜ்கின்சன் (2 நிமிடங்கள் 01.59 செக்.) இரண்டாவது இடத்தையும், கென்யாவின் மெர்ரி மொரா (2 நிமிடங்கள் 01.66 செக்.) மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

எனினும், 45 வீராங்கனைகள் பங்குபற்றிய 6 தகுதிச்சுற்றுப் போட்டிகள் முடிவில் ஒட்டுமொத்த நிலையில் 43 ஆவது இடத்தையே நிமாலி பெற்றார். இதன்படி, 24 வீராங்கனைகள் பங்குபற்றுகின்ற அரை இறுதி வாய்ப்பை நிமாலி தவறவிட்டார்.

இதனிடையே இலங்கை மற்றுமொரு எதிர்பார்ப்பாக அமைந்துள்ள யுபுன் அபேகோன், நாளை மாலை நடைபெறவுள்ள ஆண்களுக்கான 100 மீட்டர் தகுதிச்சுற்றில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.