July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உஸ்பகிஸ்தானை வென்ற இலங்கை, ஆசிய கரப்பந்து சம்பியன்ஷிப்பிற்கு தகுதி

ஆசிய கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடருக்கான தகுதிகாண் போட்டியில் உஸ்பகிஸ்தானை 3-0 என்ற நேர் செட் கணக்கில் இலங்கை அணி இலகுவாக வீழ்த்தியது.

இதன்மூலம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடருக்கு இலங்கை அணி தகுதி பெற்றது.

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இன்று (14)பிற்பகல் நடைபெற்ற இப்போட்டியின் முதல் செட்டில் இரு அணி வீரர்களும் கடுமையான போட்டியை கொடுத்தனர்.

எனினும், இறுதியில் இலங்கை அணி 25–23 என முதல் செட்டைக் கைப்பற்றியது.

எனினும், இரண்டாவது செட்டில் இலங்கை வீரர்கள் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தியமையால், இந்த செட்டை 25-13 என இலகுவாக கைப்பற்றி போட்டியில் முன்னிலை பெற்றது.

மூன்றாவது செட்டை வென்றால் மாத்திரமே போட்டியில் நிலைத்திருக்க முடியும் என்ற கட்டாயத்தில் களமிறங்கிய உஸ்பெகிஸ்தான் அணியினர் இலங்கைக்கு கடும் சவாலை கொடுத்தனர்.

ஒரு கட்டத்தில் 6 புள்ளிகள் வித்தியாசத்தில் பின்னிலையில் இருந்த இலங்கை வீரர்கள் பிற்பகுதியில் ஆக்ரோஷமான ஒரு ஆட்டத்தைக் காண்பித்தனர்.

இதன் விளைவாக மிகவும் விறுவிறுப்பாக சென்ற இந்த செட்டினை 25-22 என இலங்கை அணி கைப்பற்றி, போட்டியை 3-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி கொண்டது.

இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி இந்த வருடம் செப்டம்பர் மாதம் ஜப்பானின் ச்சிபா நகரில் நடைபெறவுள்ள 21 ஆவது ஆசிய கரப்பந்து சம்பியன்ஷிப் தொடருக்கு தகுதி பெற்றது.

இந்தப் போட்டித் தொடரில் ஆசியாவின் முன்னணி 16 நாடுகள் பங்கு கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.