July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

லங்கா பிரீமியர் லீக் 2021: ஐந்து உள்ளூர் நட்சத்திர வீரர்களின் விபரங்கள் அறிவிப்பு!

இரண்டாவது தடவையாக இவ்வருடம் நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் தொடரில் பங்குபற்றவுள்ள ஐந்து அணிகளுக்கான உள்ளூர் நட்சத்திர வீரர்களின் பெயர் விபரங்கள் இலங்கை கிரிக்கெட் சபையினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி டஸ்கர்ஸ் அணியின் தலைவராக கடந்த வருடம் விளையாடிய குசல் ஜனித் பெரேரா இம்முறை கலம்போ கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரராக பெயரிடப்பட்டுள்ளார்.

கடந்த முறை குசல் ஜனித் பெரேரா தலைமையிலான கண்டி டஸ்கர்ஸ் அணி புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தை  பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, சகலதுறை வீரர் தசுன் ஷானக்க தனது வழமையான தம்புள்ள வைக்கிங் அணியின் நட்சத்திர வீரராக தொடர்ந்து தக்கவைத்து கொள்ளப்பட்டுள்ளார்.

இது இவ்வாறிருக்க, கோல் க்ளடியேட்டர்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக கடந்த வருடம் விளையாடிய தனுஷ்க குணதிலக்க இந்த வருடம் அதே அணியில் நட்சத்திர வீரராக இடம்பெறவுள்ளார்.

கடந்த வருடம் நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக் போட்டிகளில் கோல் க்ளடியேட்டர்ஸ் அணியை இறுதிப் போட்டி வரை அழைத்து வருவதில் முக்கிய காரணமாக இருந்த தனுஷ்க, அந்தத் தொடரில் அதிக ஓட்டங்களை  குவித்த வீரராகவும் இடம்பிடித்தார்.

நடப்பு சம்பியன் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் வெற்றிகளில் பிரதான பங்காற்றி அங்குரார்ப்பண லங்கா பிரீமியர் லீக் போட்டியில் தொடர் நாயகனான வனிந்து ஹசரங்க, இவ் வருடம் அதே அணியில் நட்சத்திர வீரராக இடம்பெறுகின்றார்.

இதேவேளை, கண்டி டஸ்கர்ஸ் அணியின் நட்சத்திர வீரராக கடந்த வருடம் தம்புள்ள வைக்கிங் அணிக்காக விளையாடிய நிரோஷன் திக்வெல்ல பெயரிடப்பட்டுள்ளார்.

இது இவ்வாறிருக்க, இரண்டாவது முறையாக நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிக்காக வெளிநாட்டு வீரர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் இன்று (21) முதல் ஆரம்பமாகியுள்ளன.

இந்த முறை போட்டியில் பங்குபற்ற விரும்பும் வீரர்கள் இலங்கை கிரிக்கெட் சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளமான  www.srilankacricket.lk என்ற பக்கத்தில் பதிவு செய்ய முடியும்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அல்லது முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய வெளிநாட்டு வீரர்கள் மாத்திரமே இத் தெரிவுக்கு தகுதி உடையவர்கள் எனவும் இலங்கை கிரிக்கெட் சபை குறிப்பிட்டது.

இதன்படி, எதிர்வரும் 27 ஆம் திகதி மதியம் 12 மணிக்கு முன்னர் பதிவு செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளின் பின்னர் போட்டிக்கான வீரர்களின் பட்டியல் தயாரிக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஜூலை மாதம் 29 ஆம் திகதி ஓகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி வரை  லங்கா பிரீமியர் லீக் போட்டித் தொடரை ஹம்பாந்தோட்டையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.