November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அவுஸ்திரேலிய வீரர் பாட் கம்மின்ஸ் இந்தியாவின் கொவிட் தடுப்பு நிதியத்துக்கு 50 ஆயிரம் டொலர்கள் நன்கொடை

Photo: BCCI

அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரருமான பாட் கம்மின்ஸ், இந்திய அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கை நிதியத்துக்கு (பி.எம். கெயார்ஸ் – PM Cares Fund) 50 ஆயிரம் டொலர்களை  நன்கொடையாக வழங்கியுள்ளார்.

தனது இந்தச் சிறிய பங்களிப்பின் மூலம் வைத்தியசாலைகளுக்கு ஒக்சிஜன் விநியோகத்தை அதிகப்படுத்த முடியும் என்று கம்மின்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸின் 2 ஆவது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாளாந்தம் சுமார் 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் வைத்தியசாலைகளில் இடம் இல்லாமலும், அவசர உதவிக்கு முக்கியமான ஒக்சிஜன் கிடைப்பதிலும் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதில் வைத்தியசாலைகளில் ஒக்சிஜன் தட்டுப்பாட்டால் மக்கள் உயிரிழந்து வரும் துயரமான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லியில் மட்டும் ஒக்சிஜன் தட்டுப்பாட்டால் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இதனால் இந்தியாவிற்கு ஒக்சிஜன் உள்ளிட்ட மருத்துவ வசதிகளை வழங்க அமெரிக்கா, பிரிட்டன், அவுஸ்திரேலியா, சவுதி அரேபியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன.

இந்த நிலையில், தற்போது நடைபெற்று வருகின்ற ஐ.பி.எல் டி-20 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ், இந்திய மக்களுக்கு ஒக்சிஜன் வாங்குவதற்கும், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கும் 50 ஆயிரம் டொலர்களை பி.எம்.கெயார்ஸ் நிதியத்துக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக பாட் கம்மின்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,

இந்தியா நான் பல ஆண்டுகளாக மிகவும் நேசித்த நாடு. இதுநாள் வரை நான் சந்தித்ததிலேயே இங்குள்ள மக்கள் மிக அன்பானவர்கள், கனிவானவர்கள். கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாகிவரும் இந்த நேரத்தில் மக்கள் பலரும் மிகவும் கஷ்டப்படுகிறார்கள் என்பதை அறிந்தபோது மிகவும் வேதனையாக இருந்தது.

கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் தீவிரமாக இருக்கும்போது, ஐ.பி.எல் டி-20 போட்டிகள் நடத்துவது சரியானதுதானா என்றெல்லாம் சில ஆலோசனைகள், விவாதங்கள் ஓடின. என்னுடைய ஆலோசனை என்னவென்றால், இந்தக் கடினமான நேரத்தில் ஒவ்வொரு நாளும் ஊரடங்கில் இருக்கும் மக்கள் சில மணி நேரம் மகிழ்ச்சியாகவும், தங்களை மகிழ்ச்சிப்படுத்தவும் இந்த ஐ.பி.எல் டி-20 தொடர் உதவுகிறது.

இலட்சக்கணக்கான மக்களுக்கு நல்ல விதமாகப் பயன்பட வேண்டும் என்பதற்காக விளையாட்டு வீரர்களாகிய எங்களுக்கு  சிறப்பு உரிமை வழங்கப்பட்டு, அதற்கான தளம் அமைக்கப்பட்டுள்ளது. அதை மனதில் வைத்து நான் பி.எம். கெயார்ஸ் நிதியத்துக்கு பங்களிப்பு செய்திருக்கிறேன்.

குறிப்பாக, நோயுற்ற மக்களுக்கு ஒக்சிஜன் வாங்கி வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்க இந்த நிதி உதவட்டும். மற்ற வீரர்களும் இதேபோன்று தங்களால் முடிந்த பங்களிப்பை வழங்க இது ஊக்கமாக அமையும்.

என்னுடன் விளையாடும் சக வீரர்களும், உலகில் வேறு எங்கு வேண்டுமானாலும் இருந்து, இந்தியா மீது அன்பும், இரக்கமும் கொண்டிருப்பவர்கள் யார் வேண்டுமானாலும் பங்களிப்பு செய்யுங்கள். நான் 50 ஆயிரம் டொலர்களை அளித்து பங்களிப்பைத் தொடங்குகிறேன் என பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.