January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொரோனா பரவல் எதிரொலி; ஐ.பி.எல் தொடரிலிருந்து அஸ்வின், இரு ஆஸி. வீரர்கள் விலகுவதாக அறிவிப்பு

Photo: BCCI

ஐ.பி.எல் போட்டியிலிருந்து இந்திய வீரர் அஸ்வினும், அவுஸ்திரேலிய வீரர்களான ஆடம் ஸாம்பா, கேன் ரிச்சர்ட்சன் ஆகியோரும் விலகியுள்ளார்கள்.

இந்தியாவில் ஐ.பி.எல் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து அணிகளும் 5 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், சென்னை சுப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ் ஆகிய அணிகள் தலா 8 புள்ளிகளுடன் முதல் இரு இடங்களைப் பிடித்துள்ளன. ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 3ஆம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது.

அத்துடன், ஐ.பி.எல் தொடரின் 20 லீக் போட்டிகள் சென்னை மற்றும் மும்பை ஆகிய இடங்களில் நடைபெற்று முடிந்துள்ளன. அடுத்ததாக அணி வீரர்கள் டெல்லி மற்றும் அஹமதாபாத்திற்கு சென்று அடுத்தகட்ட லீக் போட்டிகளில் விளையாடவுள்ளனர்.

இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருவதால் ஐ.பி.எல் போட்டியில் தொடர்ந்து விளையாட வீரர்களிடையே தயக்கம் நிலவி வருகிறது.  இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கையும், மரணங்களும் இதற்கான சந்தேகத்தை ஏற்படுத்தி வருகின்றன.

இந்த சீசனில் பயோ பபுள் பாதுகாப்பு வளையம், அதிகமான கொரோனா பரவல் உள்ளிட்டவை அணி வீரர்களின் மனதில் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.

இது இவ்வாறிருக்க, ஐ.பி.எல் தொடரிலிருந்து டெல்லி கேபிடல்ஸ் அணி வீரரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழல்பந்து வீச்சாளருமான அஸ்வின்  விலகியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலின்போது குடும்பத்துடன் இருக்கவேண்டிய அவசியம் இருப்பதால் ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகியதாக அஸ்வின் தெரிவித்துள்ளார். அதேநேரம், கொரோனா பாதிப்பு குறைந்து வழமைக்கு திரும்பினால், தான் அணியுடன் இணைந்துகொள்வேன் என்றும் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டரில் அஸ்வின் கூறியிருப்பதாவது, 2021 ஐ.பி.எல் தொடரிலிருந்து நான் விடைபெற்றுக் கொள்கிறேன். கொரோனா வைரஸுக்கு எதிராக என்னுடைய குடும்பத்தார் போராடிவரும் நிலையில், இந்த நேரத்தில் அவர்களுக்காக இந்த கடினமான நேரத்தில் உடன் இருப்பது அவசியம். அனைத்தும் சரியான திசையில் சென்றால் நான் மீண்டும் அணியில் இணைந்து கொள்வேன் என எதிர்பார்க்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

இந்த கடினமான தருணத்தில் அஸ்வினுக்கு முழு ஆதரவு அளிப்பதாக டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகமும் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.

இதேபோல ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இடம்பெற்றுள்ள அவுஸ்திரேலிய வீரர்களான கேன் ரிச்சர்ட்சனும், ஆடம் ஸாம்பாவும் தனிப்பட்ட காரணங்களுக்காக நாடு திரும்ப முடிவெடுத்துள்ளார்கள். இதனால் இருவரும் ஐ.பி.எல் போட்டியில் இடம்பெறமாட்டார்கள் என பெங்களூர் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த வீரர்களின் முடிவுக்கு மதிப்பளிப்பதாகவும், அவர்களுக்கு முழு ஆதரவு அளிப்பதாகவும் பெங்களூர் அணி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவர்களுக்கு முன்பு ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியைச் சேர்ந்த மற்றொரு அவுஸ்திரேலிய வீரர் ஆண்ட்ரூ டை, நாடு திரும்பினார்.

அதிகமான கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் இருந்து வரும் 30 சதவீத விமான சேவைகளை அவுஸ்திரேலிய அரசு தடை செய்துள்ளது. இதையடுத்து இந்தியாவிலேயே முடங்கும் ஆபத்தை தவிர்க்கும் வகையில் நாடு திரும்பும் முடிவை எடுத்துள்ளதாக அவுஸ்திரேலிய வீரர் ஆன்ட்ரூ டை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேபோல, கடந்த வாரம் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியைச் சேர்ந்த இங்கிலாந்து வீரரான லியம் லிவிங்ஸ்டன், கொரோனா பாதுகாப்பு வளையத்தால் ஏற்பட்ட சோர்வு காரணமாக சொந்த நாட்டுக்கு திரும்பியிருந்தார்.

எனவே, ஐ.பி.எல் தொடரிலிருந்து முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து விலகி வருவது கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதுடன், எதிர்வரும் நாட்களில் அவுஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணி வீரர்கள் நாடு திரும்புவார்கள் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேபோல, இப்படி வீரர்கள் ஒவ்வொருவராக விலகினால், சில வேளைகளில் ஐ.பி.எல் தொடரை ஒத்திவைக்கும் வாய்ப்புகள் உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

முன்னாள் ஐ.பி.எல் வீர்ரும், அவுஸ்திரேலிய வீரருமான அடெம் கில்கிறிஸ்ட் கொரோனா உச்சத்தை தொட்டுள்ள நிலையில் ஐ.பி.எல் தொடர் தேவைதானா என்ற கேள்வியை எழுப்பி இருந்தார். அதேபோல, பாகிஸ்தானின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் சொஹைப் அக்தரும், ஐ.பி.எல் மற்றும் பி.எஸ்.எல் போட்டிகளை நடத்துவது பொருத்தமல்ல என தெரிவித்திருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

14 ஆவது ஐ.பி.எல் தொடர் எதிர்வரும் மே மாதம் 30ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.