விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில் கடற்கரை விளையாட்டுகளை நடத்துவதற்கான பிரதான கேந்திர நிலையமாக திருகோணமலை கடற்கரை மேம்படுத்தப்படவுள்ளது.
அதேபோல, கிரிக்கெட், வலைப்பந்து உள்ளிட்ட தேசிய அணிகளில் கிழக்கு மாகாணத்தில் இருந்து திறமையான வீராங்கனைகளை மிக விரைவில் இணைத்துக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இதற்கான வேலைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ள ‘திறந்த நாள்’ என்ற புதிய வேலைத்திட்டத்தின் கீழ் திருகோணமலை நகரசபை விளையாட்டு மைதானத்துக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ விஜயம் செய்தார்.
இதன்போது, மைதானத்தின் தற்போதைய நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர், அங்குள்ள குறைபாடுகளை மிக விரைவில் நிவர்த்தி செய்து வீரர்களின் பாவனைக்காக வழங்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், திறமை, தேடல் நிகழ்ச்சியின் மூலம் கிழக்கு மாகாணத்தில் இருந்து பெண்கள் கிரிக்கெட் அணியொன்றை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதேபோல, வலைப்பந்து அணியொன்றை உருவாக்க 5 அடி மற்றும் 10 அங்குலம் உயரமுள்ள பெண்களைத் தேடுவதற்கான வேலைகளை ஆரம்பிக்கும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
இந்த நிகழ்வில் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் அனுராத விஜேகோன், விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகம் அமல் எதிரிசூரிய, திருகோணமலை மாவட்ட செயலாளர் சமன் தர்ஷன மற்றும் தேசிய இளைஞர் சேவை அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.