இந்தியாவின் ராய்பூர் நகரில் நடைபெற்ற வீதி பாதுகாப்பு உலக டி -20 தொடரில் யுவராஜ் சிங், யூசுப் பதான் ஆகியோர் அரைச்சதம் விளாச 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை லெஜண்ட்ஸ் அணியை வீழ்த்தி இந்தியா லெஜண்ட்ஸ் அணி சம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை லெஜண்ட்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா லெஜண்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 184 ஓட்டங்களைக் குவித்தது.
யூசுப் பதான் 36 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 62 ஓட்டங்களையும், யுவராஜ் சிங் 41 பந்துகளில் 60 ஓட்டங்களையும் பெற்ற அதேவேளை, அணித்தலைவர் சச்சின் தெண்டுல்கர் 23 பந்துகளில் 30 ஓட்டங்களைப் பெற்றார்.
இலங்கை லெஜண்ட்ஸ் அணி சார்பில் ரங்கன ஹேரத், சனத் ஜயசூரிய, பர்வீஸ் மஹ்ரூப், கௌஷல்ய வீரரத்ன ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் வீழ்த்தினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை லெஜண்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 167 ஓட்டங்களை பெற்று 14 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது.
இதன்படி இந்திய லெஜண்ட்ஸ் அணி அங்குரார்ப்பண வீதி பாதுகாப்பு உலக டி-20 தொடரின் சம்பியனாக தெரிவாகியது.
இலங்கை லெஜண்ட்ஸ் அணி சார்பில் சனத் ஜயசூரிய 35 பந்துகளில் 43 ஓட்டங்களையும், சிந்தக ஜயசிங்க 30 பந்துகளில் 40 ஓட்டங்களையும், கௌஷல்ய வீரரத்ன 15 பந்துகளில் 38 ஓட்டங்களையும் பெற்றனர்.
இந்தியா லெஜண்ட்ஸ் அணி சார்பாக யூசுப், இர்பான் பதான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
போட்டியின் ஆட்டநாயகனாக இந்தியாவின் யூசுப் பதானும், தொடரின் நாயகனாக இலங்கையின் திலகரட்ன டில்ஷானும் தெரிவாகினர்.