விளையாட்டு அமைச்சின் ஏற்பாட்டில் வட மாகாணத்துக்கான பிறேடே கோப்பை உதைபந்தாட்ட சுற்று போட்டி 13 வருடங்களின் பின்னர் கிளிநொச்சி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் செயலாளர் பாலிந்த விக்ரமசிங்க பிரதம அதிதியாக கலந்துகொண்டு இந்த சுற்று போட்டியை ஆரம்பித்துவைத்தார்.
விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் தேசிய இளைஞர் சேவை கோர்ப்பஸின் ஏற்பாட்டில் நாடு பூராகவும் இடம்பெற்று வருகின்ற பிறேடே கோப்பைக்கான சுற்றுப்போட்டியில் நான்கு அணிகளுக்கான கால்பந்து போட்டிகள் கிளிநொச்சியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
உருத்திரபுரம் விளையாட்டுக் கழகம், லக்கி ஸ்டார் விளையாட்டு கழகம், உதயதாரகை விளையாட்டுக் கழகம், ஸ்டார் ஈகிள் விளையாட்டு கழகம் ஆகிய நான்கு அணிகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில் இறுதிப் போட்டிக்கு தெரிவான உருத்திரபுரம் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து கிளிநொச்சி நகர் ஸ்டார் ஈகிள் விளையாட்டு கழகம் தெரிவு செய்யப்பட்டது.
இறுதிப்போட்டியில் இரண்டு அணிகளும் எந்த கோல்களையும் போடாமல் சமநிலையில் காணப்பட்டமையினால் போட்டியின் நடுவரின் தீர்மானத்தின்படி தண்ட உதையில் கிளிநொச்சி நகர் ஸ்டார் ஈகிள் விளையாட்டுக்கழகம் பிறேடே கோப்பையை தனதாக்கிக்கொண்டது.
வெற்றியீட்டிய ஸ்டார் ஈகிள் விளையாட்டுக்கழகத்துக்கு வெற்றி கோப்பையை கிளிநொச்சி படைமுகாம்களின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் கொட்டுவக்கொட வழங்கிவைத்தார்.