தென் ஆபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை 95 ஓட்டங்களால் வெற்றிகொண்ட பாகிஸ்தான் தொடரை 2-0 எனும் ஆட்டக்கணக்கில் கைப்பற்றியது.
ராவல்பிண்டியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஐந்தாம் நாளில் கைவசம் 9 விக்கெட்டுகள் இருக்க வெற்றிக்கு மேலும் 243 ஓட்டங்கள் தேவையான நிலையில் தென் ஆபிரிக்க அணி இரண்டாம் இன்னிங்ஸை தொடர்ந்தது.
எய்டன் மக்கரம் 59 ஓட்டங்களுடனும், வென்டர் டசன் 48 ஓட்டங்களுடனும் ஆட்டத்தை ஆரம்பித்தனர். எனினும் வீசப்பட்ட மூன்றாவது பந்திலேயே வென்டர் டசன் மேலதிகமாக ஓர் ஓட்டத்தைக்கூட பெற முடியாமல் ஆட்டமிழந்தார்.
எய்டன் மக்ரம் சதமடித்து 108 ஓட்டங்களைப் பெற்ற போதிலும் அணியின் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. நட்சத்திர வீரர்களான பெப் டு பிலெசி 5 ஓட்டங்களுடனும், அணித்தலைவர் குவின்டன் டி கொக் ஓட்டமின்றியும் ஆட்டமிழந்ததே அதற்கு காரணம்.
டெம்பா பவுமா 61 ஓட்டங்களைப் பெற்றார். பின்வரிசையில் கேஷவ் மஹாராஜ் ஆகியோரும் ஓட்டமின்றி வெளியேறினர். தென் ஆபிரிக்க அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் 274 ஓட்டங்களுடன் முடிவுக்கு வந்தது.
பந்துவீச்சில் ஹசன் அலி 5 விக்கெட்டுகளையும், சஹீன் சஹா அப்ரிடி 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
போட்டியின் சிறந்த வீரரான ஹசன் அலியும், தொடரின் சிறந்த வீரராக மொஹமட் ரிஸ்வானும் தெரிவாகினர்.