பாகிஸ்தான் மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடும் சவாலான நிலையை அடைந்துள்ளது. போட்டியில் வெற்றிபெறுவதற்கு இரண்டு அணிகளுமே 50 வீத வாய்ப்புடன் விளையாடுகின்றன. இதனால் ஐந்தாம் நாள் ஆட்டம் தீர்மானமிக்கதாய் மாறியுள்ளது.
ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் தென் ஆபிரிக்காவின் வெற்றி இலக்கு 370 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை நோக்கி இரண்டாம் இன்னிங்ஸில் பதிலளித்தாடும் தென் ஆபிரிக்க அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 127 ஓட்டங்களை நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் பெற்றிருந்தது.
இதன்படி தென் ஆபிரிக்காவுக்கு மேலும் 243 ஓட்டங்கள் தேவைப்படுவதுடன், பாகிஸ்தான் 9 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டியுள்ளது.
தென் ஆபிரிக்க அணியின் இரண்டாம் இன்னிங்ஸில் டீன் எல்கர் 17 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். எய்டன் மக்ரம் 59 ஓட்டங்களுடனும், வென்டர் டசன் 48 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.
நான்காம் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்புக்கு 129 ஓட்டங்களுடன் இரண்டாம் இன்னிங்ஸை தொடர்ந்தது. 28 ஓட்டங்களுடன் களமிறங்கிய மொஹமட் ரிஸ்வான் சதமடித்தார். 204 பந்துகளை எதிர்கொண்ட அவர் 115 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றார்.
பாகிஸ்தான் அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் 298 ஓட்டங்களுடன் முடிவுக்கு வந்தது. பஹீம் அஷ்ரப் 29 ஓட்டங்களையும், பின்வரிசை வீரரான நவ்மன் அலி 45 ஓட்டங்களையும் பெற்றனர்.
முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் 272 ஓட்டங்களையும், தென் ஆபிரிக்கா 201 ஓட்டங்களையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.