தென் ஆபிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது. இதன்மூலம் கராச்சியில் டெஸ்ட் போட்டியில் தோல்வியடையாத அணி என்ற வெற்றி வரலாற்றையும் பாகிஸ்தான் அணி தக்கவைத்துக்கொண்டது.
முதல் இன்னிங்ஸில் தென் ஆபிரிக்கா 220 ஓட்டங்களையும், பாகிஸ்தான் 378 ஓட்டங்களையும் பெற்றன. 158 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 4 விக்கெட் இழப்புக்கு 187 ஓட்டங்களுடன் நான்காம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தது.
கேசவ் மகாராஜ் 2 ஓட்டங்களுடனும், அணித்தலைவர் குவின்டன் டி கொக் ஓட்டமின்றியும் ஆட்டத்தை ஆரம்பித்தனர். இவர்களால் நான்காம் நாளில் ஓர் ஓட்டத்தைக்கூட பகிர முடியவில்லை.
வீசப்பட்ட முதல் பந்திலேயே கேசவ் மகாராஜ் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து அணித்தலைவர் குவின்டன் டி கொக் 2 ஓட்டங்களுடன் வெளியேறினார். பொறுமையுடன் துடுப்பெடுத்தாடிய டெம்பா கவுமா 40 ஓட்டங்களைப் பெற்று ஆறுதல் கொடுத்தார். தென் ஆபிரிக்க அணி 245 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
அறிமுக வீரரான நவ்மன் அலி 25.3 ஓவர்களில் 35 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளையும், யசிர் ஸா 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பாகிஸ்தான் அணியின் வெற்றி இலக்கு 88 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது. இலகுவான இந்த இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. அபிட் அலி 10 ஓட்டங்களுடனும், இம்ரா பட் 12 ஓட்டங்களுடனும் நடையைக் கட்டினர்.
எனினும் அசார் அலியும், அணித்தலைவர் பாபர் அசாமும் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இவர்கள் 63 ஓட்டங்களைப் பகிர்ந்தார்கள். அதற்காக 14 ஓவர்களை எடுத்தார்கள்.
அணித்தலைவர் பாபர் அசாம் 30 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.அசார் அலி 31 ஓட்டங்களையும், பவாத் ஆலம் 4 ஓட்டங்களையும் பெற்று வெற்றியை உறுதிசெய்தனர்.
போட்டியின் சிறப்பாட்டக்காரராக பவாத் ஆலம் தெரிவானார்.
கராச்சியில் 1960 ஆம் ஆண்டுக்கு பின்னர் இருந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடிவரும் பாகிஸ்தான் இதுவரை அந்த மைதானத்தில் தோல்வியடைந்ததில்லை. அந்த வெற்றி வரலாறும் இந்தமுறையும் தொடர்ந்துள்ளது.