July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சதத்தில் சாதனை படைக்கும் பவாத் ஆலம்; தென் ஆபிரிக்காவை விஞ்சியது பாகிஸ்தான்

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சதங்களை மாத்திரமே பெற்ற ஒரே பாகிஸ்தான் வீரராக பவாத் ஆலம் சாதனை படைத்துவருகிறார். தென் ஆபிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சதமடித்த இவர் தனது மூன்றாவது சதத்தைப் பூர்த்திசெய்தார்.

பவாத் ஆலம் இதுவரை 50 முதல் 99 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்ததில்லை என்பது சிறப்பம்சமாகும். அதாவது அவர் 50 ஓட்டங்களை அடைந்தாலே சதம் பெற்றுவிடும் வரலாறே பதிவாகியுள்ளது.

2009 ஆம் ஆண்டில் டெஸ்ட் அறிமுகம் பெற்ற அவர் அப்போது இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதமடித்தார். அதன் பிறகு ஆட்ட நிர்ணயம் உள்ளிட்ட சிக்கல்களால் பவாத் ஆலத்துக்கு 10 ஆண்டுகள் போட்டித்தடை விதிக்கப்பட்டது.

போட்டித்தடை முடிந்து கடந்த வருடம் அணிக்கு திரும்பிய பவாத் ஆலம் நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் கடந்த டிசம்பரில் நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதமடித்தார்.

தற்போது தென் ஆபிரிக்காவுக்கு எதிரான போட்டியிலும் அவர் சதமடித்து சாதித்துள்ளார்.

கராச்சியில் நடைபெறும் இந்தப் போட்டியில் தென் ஆபிரிக்கா முதல் இன்னிங்ஸில் 220 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

பதிலளித்தாடிய பாகிஸ்தான் அணி 33 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து மிகுந்த சிரமத்துக்குள்ளானது. அஸார் அலியும், பவாத் ஆலமும் தலா 5 ஓட்டங்களுடன் இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர்.

சிறப்பாக துடுப்பெடுத்தாடிய அசார் அலி 55 ஓட்டங்களைப் பெற்றார். அபாரமாகத் துடுப்பெடுத்தாடிய பவாத் ஆலம் தனது மூன்றாவது டெஸ்ட் சதத்தை எட்டினார். 245 பந்துகளை எதிர்கொண்ட அவர் 2 சிக்ஸர்கள், 9 பௌண்டரிகளுடன் 109 ஓட்டங்களைப் பெற்றார்.

பஹீம் அஷ்ரப் 64 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுக்க பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்புக்கு 308 ஓட்டங்களைப் பெற்றது.

பாகிஸ்தான் அணி ஒரு கட்டத்தில் 16.2 ஓவர்களில் 27 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்க அணி 220 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பதிலளித்தாடும் பாகிஸ்தான் 88 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.