July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு சவால் விடுக்குமா இலங்கை?

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி முதல் போட்டியை காலி மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) எதிர்கொள்கின்றது.

இந்தப் போட்டியானது கொரோனா முடக்கத்துக்குப் பின்னர் இலங்கையில் நடத்தப்படும் சர்வதேச கிரிக்கெட் போட்டியாகும்.

இலங்கை அணியைப் பொறுத்தவரை தென் ஆபிரிக்க மண்ணில் தொடரை 2-0 என இழந்த நிலையில் சொந்த மண்ணில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் களமிறங்குகின்றது.

உபாதைக்குள்ளான தனஞ்சய டி சில்வா, கசுன் ராஜித ஆகியோர் இந்தப் போட்டியிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். அவர்கள் உபாதையிலிருந்து பூரண குணமடைய சில நாட்கள் செல்லும் என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

அணித்தலைவர் திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை குழாத்தில் முன்னாள் அணித்தலைவரான ஏஞ்சலோ மெத்யூஸ், டினேஸ் சந்திமால் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
ஏஞ்சலோ மெத்யூஸ் உபாதை காரணமாக தென் ஆபிரிக்க விஜயத்தை இழந்தார். தென் ஆபிரிக்காவில் வைத்து உபாதைக்குள்ளான டினேஸ் சந்திமால் அதிலிருந்து குணமடைந்த நிலையில் இந்த தொடரில் பங்கேற்கின்றார்.

இலங்கையில் தற்போது காலநிலை சீராக இல்லை என்பதால் மழையால் போட்டிக்கு பாதிப்பு ஏற்படலாம் எனும் நிலைமை தோன்றியுள்ளது.

இங்கிலாந்து அணியைப் பொறுத்தமட்டில் இந்தத் தொடரை தமக்கான பயிற்சியாகவே பார்க்கின்றது. இத்தொடர் முடிந்து இந்தியாவுக்கு செல்லும் அவர்கள் அங்கு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளனர்.

இலங்கையைப் போன்ற ஆடுகளங்களே இந்தியாவிலும் இருக்கின்றன என்பதால் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றி அந்த உற்சாகத்துடன் இந்தியாவில் கால் பதிக்கவே இங்கிலாந்து அணி விரும்புகின்றது.

அதற்கு இலங்கை வீரர்கள் இடமளிப்பார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.