October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது நியூஸிலாந்து

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 176 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது.

இந்த வெற்றிக்கு அமைவாக சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் வகிக்கும் நியூஸிலாந்து டெஸ்ட் உலக சாம்பியன்ஸிப்பின் இறுதிப் போட்டிக்கும் தகுதிபெற்றுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

கிறைஸ்சர்ச்சில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் 297 ஓட்டங்களைப் பெற்றதுடன் பதிலளித்தாடிய நியூஸிலாந்து 6 விக்கெட் இழப்புக்கு 659 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை நிறுத்தியது.

362 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாம் இன்னிங்ஸை ஆரம்பித்த பாகிஸ்தான் ஒரு விக்கெட் இழப்புக்கு 8 ஓட்டங்களுடன் நான்காம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்தது. அபிட் அலி 7 ஓட்டங்களுடனும், மொஹம்மட் அப்பாஸ் ஓர் ஓட்டத்துடனும் ஆட்டத்தை தொடர்ந்தனர்.

பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க 354 ஓட்டங்களைப் பெற வேண்டியிருந்தது. எனினும், அணி வீரர்கள் மீண்டும் ஏமாற்றமளித்தனர். மொஹமட் அப்பாஸ் வந்த வேகத்திலேயே 3 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அபிட் அலி 26 ஓட்டங்களையும், அஸார் அலி 37 ஓட்டங்களையும் பெற்று வெளியேறினர். ஏனைய வீரர்கள் எவரும் குறிப்பிடும்படியாக ஓட்டங்களைப் பெறவில்லை. பின்வரிசையில் ஸபார் கோபார் 37 ஓட்டங்களையும், பஹீம் அஸ்ராப் 28 ஓட்டங்களையும் பெற்று தோல்வியை தாமதிக்கச் செய்தனர்.

பாகிஸ்தான் அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் 186 ஓட்டங்களுடன் முடிவுக்குவந்தது.

பந்துவீச்சில் கைல் ஜேமிஸன் 6 விக்கெட்டுகளையும், ட்ரென் பௌல்ட் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி நியூஸிலாந்து அணியை இன்னிங்ஸ் வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த வெற்றியானது சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டெஸ்ட் உலக சாம்பியன்ஸிப் தொடரில் நியூஸிலாந்தை இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை பெற்றுக்கொடுத்துள்ளது எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

போட்டியின் சிறப்பாட்டக்காரர் மற்றும் தொடரின் சிறந்த வீரர் ஆகிய விருதுகளை கைல் ஜேமிஸன் வென்றார்.

தொடரை 2-0 எனும் ஆட்டக்கணக்கில் நியூஸிலாந்து கைப்பற்றியது.