பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அணித்தலைவர் கேன் வில்லியம்ஸின் அபார சதத்தின் மூலம் நியூஸிலாந்து அணி சரிவிலிருந்து மீண்டெழுந்தது.
கிறைஸ்சேர்ச்சில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி முதல் நாளன்று 297 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இரண்டாம் நாளான இன்று முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த நியூஸிலாந்து 71 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.
டொம் லதம் 33 ஓட்டங்களுடனும், டொம் பிலன்டல் 16 ஓட்டங்களுடனும், ரொஸ் டெய்லர் 12 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.
என்றாலும், அணித்தலைவர் கேன் வில்லியம்ஸன் மற்றும் ஹென்ரி நிகோல்ஸ் ஜோடி அபாரமாகத் துடுப்பெடுத்தாடி அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தது. இவர்கள் வீழ்த்தப்படாத நான்காம் விக்கெட்டுக்காக ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
கேன் வில்லியம்ஸன் தனது 24 ஆவது டெஸ்ட் சதத்தைப் பூர்த்திசெய்தார். இது இந்த டெஸ்ட் தொடரில் அவர் தொடர்ச்சியாகப் பெற்ற இரண்டாவது சதமாகும்.
175 பந்துகளை எதிர்கொண்ட கேன் வில்லியம்ஸன் 16 பௌண்டரிகளுடன் 112 ஓட்டங்களையும், 186 பந்துகளை எதிர்கொண்ட ஹென்ரி நிகோல்ஸ் 8 பௌண்டரிகளுடன் 89 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றனர்.
நியூஸிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 286 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதன்படி பாகிஸ்தானை விஞ்சுவதற்கு நியூஸிலாந்து மேலும் 11 ஓட்டங்களைப் பெற வேண்டியுள்ளது.
சஹின் சஹா அப்ரிடி, மொஹமட் அப்பாஸ், பஹீம் அஸ்ராப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.