November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பில்லிங்ஸின் சதம் வீண்; இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவுஸ்திரேலியா முன்னிலை!

மேன்சஸ்டரில் நடைபெற்றுவரும் இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆட்டங்களைக் கொண்ட ஒருநாள் போட்டித்தொடரின் முதலாவது ஆட்டத்தில் 19 ஓட்டங்களால் வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா அணி 1-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது.

அவுஸ்திரேலியாவின் முன் வரிசை வீரர்களுக்கு ஆர்ச்சர் மற்றும் மார்க் வூட் ஆகியோர் தொடர்ச்சியாக பந்துவீச்சால் அழுத்தம் கொடுத்த நிலையில், 5 விக்கெட்டுக்களை பறிகொடுத்து 123 ஓட்டங்களை மட்டுமே ஒரு கட்டத்தில் அவுஸ்திரேலியா பெற்றிருந்தது. 6-வது விக்கெட்டிற்காக மார்ஷுடன் ஜோடி சேர்ந்து மக்ஸ்வெல் 126 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர அவுஸ்திரேலியா வலுவான நிலைக்கு நகர்ந்தது.

மக்ஸ்வெல் 77 ஓட்டங்களையும் மார்ஷ் 73 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க அவுஸ்திரேலியா 294 என்ற பலமான ஓட்ட எண்ணிக்கையினை எடுத்தது. பந்துவீச்சில் ஆர்ச்சர் மற்றும் வூட் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தனர். பதிலிற்கு துடுப்பாடிய இங்கிலாந்து அணியினர் – றோயல் மற்றும் றூட் அணிக்கு திரும்பியிருந்த போதும்- முதல் 10 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்தது 22 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டனர்.

இது 2006 க்கு பின்னர் இங்கிலாந்து தமது சொந்தமண்ணில் பெற்றுக்கொண்ட மிக மோசமான பவர்பிளே ஓட்ட எண்ணிக்கை ஆகும்.ஒரு முனையில் பேர்ஸ்டோவ் நிதானமாக 84 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, ஆறாவது இலக்கத்தில் களத்திற்கு வந்த பில்லிங்ஸ் ஒருநாள் போட்டியில் தனது முதலாவது சதத்தினை பதிவுசெய்தார். இங்கிலாந்தின் ஓட்ட எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதில் மிக முக்கிய பங்கு வகித்த ஹேஸல்வூட்- றோய், றூட் மற்றும் மொயின் அலியினது விக்கெட்டுக்களை வெறுமனே 26 ஓட்டங்களைக் கொடுத்து சாய்த்திருந்தார்.

சுழற்பந்து வீச்சாளர் சம்பாவும் 4 விக்கெட்டுக்களை சாய்க்க- பில்லிங்ஸ் 118 ஓட்டங்களை குவித்து போராடிய போதும் 19 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா அணி வெற்றியினை தனதாக்கியது. அடுத்த இரண்டு ஆட்டங்களும் வரும் ஞாயிறன்றும் புதன்கிழமையும் நடக்கவுள்ளன.