சுவீடனுக்கு எதிரான நேற்றைய நேஷன்ஸ் லீக் (Nations League) ஆட்டத்தின்போது போத்துக்கல் அணிக்காக தனது 100-ஆவது கோலினை போட்டார் நட்சத்திர கால்பந்தாட்ட வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ.
இதன்மூலம், தேசிய அணிக்காக இந்த மைல்கல்லை எட்டிய இரண்டாவது வீரராக 35 வயதான ரொனால்டோ தன்னை பதிவு செய்துள்ளார்.முதலாவது இடத்தினை ஈரான் அணிக்காக- 1993-2006 காலப்பகுதியில் விளையாடி- 109 கோல்களை குவித்த அலி டேயி தொடர்ந்தும் தக்க வைத்துள்ளார்.
நேற்றைய போட்டியில் முதற் பாதியாட்டம் நிறைவடைவதற்கு சில நிமிடங்கள் முன்னதாக கிடைத்த ‘ப்ரீ கிக்கினை’ கோலாக மாற்றியதன் மூலம் இந்த மைல்கல்லை அவர் எட்டினார்.இது அவர் போட்டுள்ள 57-ஆவது ‘ப்ரீ கிக்’ கோல் என்பதும், குறிப்பாக போத்துக்கல் அணிக்கான 10ஆவது ‘ப்ரீ கிக்’ என்பதும் குறிப்பிடத்தக்கது. 100-ஆவது கோலிற்காக 10 மாதங்களுக்கு மேலாக காத்திருந்த ரொனால்டோவுக்கு 101-ஆவது கோலினை போடுவதற்கு நேற்றைய ஆட்டத்தினபோது சில நிமிடங்களே தேவைப்பட்டன.போட்டியின் 72-ஆவது நிமிடத்தில் ரொனால்டோ போட்ட இரண்டாவது கோலுடன் 2-0 என்ற கணக்கில் போட்டியில் போத்துக்கல் வெற்றி பெற்றது.
Nations League போட்டியில் போத்துக்கல் அணியினர் தாங்கள் இடம்பெற்றுள்ள குழுவில் முதல் இடத்தினை தக்கவைத்துக் கொண்டு, வெற்றிக் கிண்ணத்தை தக்கவைக்கும் பயணத்தில் வலுவாக இருக்கின்றனர்.19-ஆவது வயதில், யூரோ கிண்ண போட்டியில் போத்துக்கலுக்காக முதலாவது கோலினை போட்ட ரொனால்டோ அதே தொடரில் போத்துக்கல், கிரீஸிற்கெதிரான இறுதிப் போட்டியில் தோல்வியடைந்ததையும் கண்டிருந்தார்.2016-இல் போத்துக்கலினை யூரோ கிண்ண வெற்றிக்கும், 2019-இல் முதலாவது நேசன்ஸ் லீக் வெற்றிக்கும் வழிநடத்தியிருந்தார் ரொனால்டோ.