November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நியூஸிலாந்திடம் மீண்டும் தோல்வியடைந்த பாகிஸ்தான்

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியியை நியூஸிலாந்து அணி 9 விக்கெட்டுகளால் வெற்றிகொண்டதற்கமைய ஒரு போட்டி எஞ்சியிருக்கும் நிலையில் தொடரையும் நியூஸிலாந்து கைப்பற்றியுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டி ஹெமில்டனில் நடைபெற்றது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்துக்குள்ளானது.

தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் ஓட்டங்களைப் பெறுவதில் சிரமத்தை எதிர்நோக்கினார்கள். ஆனாலும், தனி ஒருவராகப் பிரகாசித்த மொஹமட் ஹாபிஸ் அதிரடியாக ஓட்டங்களைக் குவித்து பாகிஸ்தானை சவாலான நிலைக்கு கொண்டுவந்தார். 57 பந்துகளை எதிர்கொண்ட அவர் 5 சிக்ஸர்கள், 10 பௌண்டரிகளுடன் 99 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றார்.

பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 163 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் டிம் சவுத்தி 4 ஓவர்களில் 21 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

164 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய நியூஸிலாந்து அணி 3.3 ஓவர்களில் 35 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது முதல் விக்கெட்டை இழந்தது. மார்டின் கப்தில் 21 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

என்றாலும், அடுத்து இணைந்த டிம் ஸெய்பேர்ட் மற்றும் அணித்தலைவர் கேன் வில்லியம்ஸன் ஜோடி சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றது. இவர்கள் வீழ்த்தப்படாத இரண்டாம் விக்கெட்டுக்காக 95 பந்துகளில் 129 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றியை உறுதிசெய்தனர்.

டிம் ஸெய்பேர்ட் 3 சிக்ஸர்கள், 8 பௌண்டரிகளுடன் 84 ஓட்டங்களையும், கேன் வில்லியம்ஸன் 57 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றனர்.

நியூஸிலாந்து அணி 19.2 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு வெற்றியை எட்டியது. தொடரில் 2-0 என நியூஸிலாந்து முன்னிலையில் உள்ளது.