நியுசிலாந்துக்கான கிரிக்கெட் சுற்றுத் தொடரை மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணியின் 6 கிரிக்கெட் வீரர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாயன்று நியுசிலாந்து சென்றடைந்த 53 உறுப்பினர்களை உள்ளடக்கிய பாகிஸ்தான் அணியினருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டதாக நியுசிலாந்து சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் அணியை பாதுகாப்பான தனிமைப்படுத்தல் அறைகளில் தங்கவைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நியுசிலாந்தில் 3 ஒரு நாள் போட்டிகளிலும் 2 டெஸ்ட் போட்டிகளிலும் கலந்துகொள்ள பாகிஸ்தான் அணி 24 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கிறிஸ்ட்சேர்ச் பயணமாகியுள்ளது.
நியுசிலாந்தில் கடுமையான சுகாதார கட்டுப்பாடுகளுடன் போட்டிகளை நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையிலேயே, பாகிஸ்தான் வீரர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
கராச்சியில் இருந்து நியுசிலாந்து செல்ல முன்னர் பாகிஸ்தான் வீரர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் தொற்று அறிகுறிகள் எதுவும் காணப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் டிசம்பர் 10 ஆம் திகதி முதல் போட்டி நடைபெறவுள்ள நிலையில், பாகிஸ்தான் அணிக்கான பயிற்சி வாய்ப்புகள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்ததன் பின்னரே வழங்கப்படவுள்ளதாகவும் தெரியவருகின்றது.