January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஏன் இந்த அவசரம்?

-குகா

ஈழத் திருநாட்டின் பொருளாதாரம் என்றும் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது. வேலையில்லா திண்டாட்டம் உச்சிமேல் எகிறியுள்ளது, வாழ்க்கைச் செலவு மலைபோல் ஏறியுள்ளது, தேசியப் பிரச்சனையான இனப்பிரச்சனைக்கு தீர்வு கிட்டவில்லை. போதைவஸ்து பாவனை தலைவிரித்தாடுகிறது, வெளிநாட்டுக் கடன் சுமையாக ஏறியுள்ளது.

இந்தநிலையில் அரசமைப்பில் 20ஆவது திருத்தத்துக்கு ஏன் அவசரம் காட்டப்படுகின்றது என்பதுதான் இன்று பலரிடமும் எழுந்துள்ள கேள்வியாகும். மகிந்த அரசு பதவியேற்று ஒரு சில மாதங்கள்தான் ஆகிறது. நாட்டில் மலை போல உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண இயலாமல் 20ஆவது திருத்தத்துக்கு அவசரம் காட்டுகின்றது. இதற்கு என்ன காரணம் என்பது குறித்து ஆராயலாம் என நினைக்கின்றேன்.

மகிந்தவின் ‘பெரமுன’ ஆரம்பிக்கப்பட்டு சிறிது காலத்தில் நடந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் அமோக வெற்றி பெற்று தெற்கில் பெரும்பான்மையான சபைகளைக் கைப்பற்றியது. அதன் பின் நடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் அமோக வெற்றி பெற்று முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் இராணுவ செல்வாக்கு பெற்றவருமான கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்கியது. அதனைத் தொடர்ந்து நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் அமோக வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையையும் பெற்றுக் கொண்டது.

அடுத்து வரும் தேர்தல்களிலும் வெற்றி வாகை சூடி முழு நாட்டையும் பெரமுனவின் கட்டுப்பாட்டில் கொண்டுவர அதன் தலைமை முடிவு செய்துள்ளது.நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 உறுப்பினர்களிடம் உள்ள அதிகாரங்களை பறித்து ஒருவர் கையில், தனி மனிதனிடம் ஒப்படைக்கவே 20ஆவது திருத்தத்துக்கு அரசு அவசரம் காட்டுகிறது. பிரதமர் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு உள்ள சகல அதிகாரங்களையும் பிடுங்கி அவற்றை ஜனாதிபதியின் கைகளில் ஒப்படைக்கவே கங்கணம் கட்டி நிற்கின்றது அரசு.

20ஆவது திருத்தத்துக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு காட்டுகின்றன. அந்தத் திருத்தத்தின் சில விடயங்களுக்கு ஆளும் தரப்புக்குள்ளும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எத்தகைய எதிர்ப்புக் கிளம்பினாலும் 20ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவோம் என அரசு மார்தட்டிக் கொண்டு நிற்கின்றது. இலங்கை ஒரு ஜனநாயக நாடு. நாட்டில் நல்லாட்சி ஒன்று அமைய வேண்டுமானால் சகல இன, மத மக்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும்.

அதை விடுத்து இது ஒரு பௌத்த நாடு என்ற கோட்பாட்டுடன் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.பௌத்த-சிங்கள பேரினவாதத்தை விதைத்து வெற்றியை அறுவடை செய்த பெரமுன கட்சியினர், சர்வாதிகார ஆட்சி ஒன்றுக்குள் நாட்டை கொண்டு செல்வதற்கு இந்த 20ஆவது திருத்தம் உதவியாக அமையப்போகிறது. நாட்டில் ஏனைய இனங்களுக்கு, மதங்களுக்கு இடமில்லாத வகையில், ஒரு தனிமனிதன் நாட்டின் தீர்மானங்களை எடுக்க வசதியாக 20ஆவது திருத்தம் அமையப்போகின்றது.

இராணுவ சிந்தனை கொண்ட ஜனாதிபதியிடம் சகல அதிகாரங்களும் குவியுமானால், நாட்டில் இராணுவ ஆட்சி தான் நடக்கப் போகின்றது என எச்சரிக்கிறார்கள் ஆய்வாளர்கள். இராணுவத்தினருக்கு நாட்டில் உயர் மதிப்பு வழங்கப்படப் போகின்றது. நாட்டில் எந்த பகுதியிலும் இராணுவத்தினர் என்னவும் செய்யலாம், ஆட்சி புரியலாம், இவற்றுக்கு இந்த 20ஆம் திருத்தம் வழிகோலப்போகின்றது என்பதே யதார்த்தமாகும்.சிவில் செயற்பாடுகளில் இராணுவத்தினரின் பங்கு உறுதி செய்யப்படப் போகின்றது.

உயர் அதிகாரிகள் முதல் சிறு அதிகாரிகள் வரை இராணுவத்தினருக்கு சலாம் போடும் நிலை கூட வரலாம். அமைச்சுக்கள் மற்றும் அரச திணைக்களங்களில் எல்லாம் இராணுவ அதிகாரிகள் பணியாற்றக் கூடிய சூழல் உருவாகப் போகின்றது.யுத்தத்திற்காக படைகளில் சேர்க்கப்பட்ட படையினர் இனி சிவில் நடவடிக்கைகளில் தாராளமாக இணைக்கப்பட போகின்றார்கள். மொத்தத்தில் நாட்டில் சிவில் ஆட்சி அல்ல இராணுவ ஆட்சி வரப்போகிறது.

இதற்கு கட்டியம் கூறும் வகையில் சகல அதிகாரங்களும் தனிமனிதனின் கைகளுக்கு செல்கின்றது. இதற்கு வழி வகுக்க அவசர அவசரமாக வருகின்றது 20ஆவது திருத்தம்.20ஆவது திருத்தம் நாட்டில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க போகின்றதா? மோசமாக்கப் போகின்றதா? பொறுத்திருந்து பார்ப்போம்.

குறிப்பு: கட்டுரையில் இடம்பெற்றுள்ளவை கட்டுரையாளரின் கருத்துக்கள். அவை தமிழ் அவனியின் கருத்துக்கள் அல்ல.